தோற்பவர்களை நிறுத்தாமல் வெல்பவர்களை நிறுத்துங்கள்! தனங்கும் ஆசனம் தரவேண்டியதில்லை என்கிறார் சுமந்திரன்

நாடாளுமன்றத் தேர்தலில் கடந்தமுறை எம்.பி. ஆக இருந்தவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கினால் எவ்வாறு இளைஞர்களையும் பெண்களையும் நிறுத்தமுடியும். தோற்பதற்கென்றே சிலரை நிறுத்துகின்றார்கள். எனக்கு ஆசனம் வழங்கவேண்டும் என்றும் இல்லை. பிறிதொருவர் தகுதியுடன் இருப்பாராயின் அவருக்கு வழங்கலாம். பழையவர்கள் புதியவர்களை வழிநடத்துபவர்களாக – அவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக – இருக்கலாம்.

– இவ்வா தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பியுமாகிய எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் சரவணபவனின் ஆசனம் தொடர்பாக  இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனா திராசாவை தனிமையில் சந்தித்த சுமந்திரன் தெரிவித்த கருத்துத் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கட்சிக்குள் மூடிய அறைக்குள் கதைத்த விடயங்களை ஊடகங்க ளிற்கு தெரிவித்து, செய்தியாக்கி குளிர் காய்பவர்கள் இருக்கிறார்கள். இதுதான் கட்சிக்கு விரோதமான விடயம். யாருக்கு வேட்புமனு வழங்கலாம், வழங்கக் கூடாது என நான் மூடிய அறைக்குள் பேசியது கட்சிக்கு விரோதமானது அல்ல .

உட்கட்சி விவகாரங்களைப் பகிரங்கமாகப் பேசக்கூடாது. அதனால் மற்றவர்களின் கருத்திற்கு பதிலளிக்கவில்லை. தேர்தல் என்றால் பல விடயங்கள் பேசப்படும். கட்சியின் அரசியல் குழுவில் நான் இந்த விடயங்களைப் பேசியிருந்தேன். இதனால்தான், படித்த, இளையவர்க ளிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டு மென சம்பந்தன் அறிவித்தார். அதைவிட, பெண்களிற்கு 50 வீதம் வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் சொன்னேன். அனுபவம் மிக முக்கியமானது. அவர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் எம்மை வழிநடத்த வேண்டும். அதேநேரம், ஏற்கனவே எம்.பியாக இருப்பவர்களிற்குவாய்ப்பளித்துவிட்டு மிகுதியான இடங்களை மற்றவர்களிற்கு பகிர்ந்தளித்தால், இளையவர்களிற்கு எப்படி வாய்ப்பளிப்பது?

கடந்த தேர்தலில் நான் கண்ட அனுபவம், தோற்கும் வேட்பாளர்களை நிறுத்தும் வழக்கமொன்றுண்டு. அதை எல்லா கட்சிகளும் செய்கின்றன. இருப்பவர்களிற்குத் தானாக நியமனம் வழங்க வேண்டாமென்று நான் கூறினேன். எம்.பியாக இருப்பதால் எனக்கும் தர வேண்டியதில்லை. எனது பெயரையும் மேசையில் வையுங்கள். புதிதாக வருபவர்களின் பெயர்களையும் வையுங்கள். யார் பொருத்தமானவர் என்பதை பார்த்து நியமனம் வழங்குங்கள்.  எவருக்கு கொடுப்பது, எவருக்கு கொடுப்பதில்லை என்பதை நாங்கள் பேசினோம். அது கட்சிக்குள் நடப்பது. பேசாமல் எப்படி நியமனம் வழங்குவது? ஆனால், கட்சிக்குள் பேசுவதை இணையத்தளத்திற்கு கொடுப்பதுதான் கட்சிக்கு விரோதமானது. கட்சிக்குள், மூடிய அறைக்குள் நான் பேசியவற்றை செய்தியாக்கிக் குளிர் காய்பவர்கள் பற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது – என்றார்.

Share the Post

You May Also Like