விகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு மாற்றுத் தலைமை தேடி அலைபவர்களில் நிலாந்தனும் ஒருவர்.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமைக்கு பொருத்தமானவர் என நினைப்பது முட்டாள்த்தனம். அதற்கான அரசியல் அனுபவம், சாணக்கியம், திறமை விக்னேஸ்வரனிடம் இல்லை. அரசியலில் அவர் ஒரு செல்லாக் காசு.

விக்னேஸ்வரன்  தொடக்கியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி ஒரு நொண்டிக் குதிரை. ஒரு லெட்டர்பாட் கட்சி. அந்தக் கூட்டணியோடு ஒரு கட்சியாவது இன்னும் கூட்டுச் சேரவில்லை!

நிலாந்தன் போன்றவர்கள் இல்லாத ஊருக்கு வழிகாட்டப் பார்க்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். அவருக்கு இருக்கிற மக்கள் ஆதரவு வேறு யாருக்கும் இல்லை.

சாணக்கியமாக காய் நகர்த்துவதில் அவரை மிஞ்ச ஆளில்லை. ஆளும் பாஜக யோடு, குறிப்பாக பிரதமர் மோடியோடு நல்ல உறவு வைத்துள்ளார்.

நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலில் விக்னேஸ்வரன் மதில் மேலு் பூனை போல் இருந்து விட்டார். “தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி எமது விரலால் சுட்டிக்காட்ட முடியாது” என்று விக்னேஸ்வரன் அறிக்கை விட்டார்.

ஒரு கட்சியின் தலைமை மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதில் இருந்து அது தப்ப முடியாது.

இதே சமயம் ததேகூ சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அதற்கிணங்க எண்பது விழுக்காடு தமிழர்கள் (முஸ்லிம்களும் ) பிரேமதாசாவுக்கு வாக்களித்தனர்.

தேர்தல் காலத்தில் நிலாந்தன் என்ன சொன்னார்?

இலங்கையில் உள்ள சுமார் 17 லட்சம் தமிழ் வாக்காளர்களில் 8.38 லட்சம் வாக்காளர்கள் வடக்கில் வசிக்கிறார்கள். கடந்த முறை போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்தில் சுமார் 21 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். இந்த முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நிச்சயம் அதைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்றார்.


ஆனால் தேர்தல் முடிவு எப்படியிருந்தது? இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கோட்டாபய இராசபக்சாவுக்கு கிடைத்த வாக்குகள் 23,261 (6.24 விழுக்காடு) மட்டுமே! ஏனைய மாவட்டங்களிலும் இதேமாதிரிதான் வாக்குகள் விழுந்தன.

உண்மையில் நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் தமிழ்மக்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் குலைத்து தமிழ் மக்களை நடுத்தெருவில் விடுவதற்கு அல்லும் பகலும் அனுவரதமும் பாடு பட்டு வருகிறார்கள். அது பலிக்காது. எமது மக்கள் புத்திசாலிகள். அரசியல் ஞானம் படைத்தவர்கள்.

விகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது. 

Share the Post

You May Also Like