கோட்டா அரசுக்கு ஆதரவளித்தால் இராணுவ முகாங்களே அதிகரிக்கும் எச்சரிக்கின்றார் செல்வம் எம்.பி.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வடக்கு மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

வடக்கில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் ஓமந்தை, கொள்ளர் புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு என பல இடங்களிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் மக்களையும் பேருந்துகளில் இருந்து இறக்கி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையை சிங்களப் பகுதிகளில் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? மதவாச்சியில் வைத்து சோதனை செய்து காட்டட்டும். சிங்கள மக்கள் தமக்கு எதிராக கொந்தளிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே இந்த அரசாங்கம் தமிழர் பகுதிகளில் இவ்வாறான இராணுவச் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களை இன்னல்படுத்துகின்றது.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்கள் உருவாக்குவார்களேயானால் இராணுவச் சோதனைச் சாவடிகளே மிச்சமாக இருக்கும் என்பதனை எமது தமிழ் மக்கள் உணர வேண்டும்.

எப்போதும் தமிழ் மக்களுக்கான துணையாக இருக்கப்போவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே என்பதனை மக்கள் காலத்திற்குக் காலம் உணர்த்திவரும் நிலையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இராணுவத்தினரைக் கொண்டு அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like