சவேந்திர சில்வாவுக்கான அமெரிக்கத் தடை: ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் முன்னேற்றம் இனியாவது குற்றவாளிகள் தண்டிக்கப்பட இலங்கை அரசு இடம் கொடுக்க வேண்டும் – வலியுறுத்துகிறார் சுமந்திரன்

“இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காகப் பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“இலங்கை அரசு இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடம் கொடுக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றுக்கான ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா பொறுப்புக்கூற வேண்டியவராகின்றார்.

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது நியமனத்தைக் கண்டித்திருந்தது.

போர் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாகப் பொறுப்புக்கூறலைத் தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசுகளின் கண்களை இத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

Share the Post

You May Also Like