சம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்!

– தெல்லியூர் சி.ஹரிகரன் –

”குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழியில் விழுந்தனவே”   என்றொரு பாடல் உண்டு. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் பிறந்ததினமாகிய இந்த மாசி மாதத்தில் 9 ஆம் திகதி விக்கி தலைமையில் உருவாகிய மாற்(ட்டு)றுத் தலைமை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குருட்டாட்டமாகவே எண்ணத் தோன்றுகின்றது. இதேநேரம், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் அரசியல் கோமாளி சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார் ச்ம்பந்தன், சுமந்திரனின் பிறந்தநாள் பரிசே தமது குருட்டாட்டம் என்று.

வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பற்றி நான் அடிக்கடி இப்பத்தியில் குறிப்பிடுகின்ற விடயம் ‘‘விநாசகாலே விபரீத புத்தி” என்று. அதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றார். அறிவு மங்கியவனுக்கு புத்தி பேதலித்துவிடும். புத்தி பேதலித்ததன் விளைவே இந்த மாற்(ட்டு)றுத் தலைமை.

வடக்கு மாகாணத்தில் ஓர் அதி உயர் பதவியில் – அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் – இருந்தவர் விக்னேஸ்வரன். அவர் தனக்குள்ள உள பாதிப்புக் காரணமாக வடக்கு மாகாணசபைக்கு வந்த எவ்வளவோ நிதியைத் திரும்பிச் செல்லவிட்டார். ஆனால், தனக்குக் கிடைக்கவேண்டிய அத்தனை சலுகைகளையும் அவர் ஒழுங்காகப் பெற்றார்.

நீதி அரசருக்கே நீதி கேள்விக்குறியாக உள்ளது.”கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு” என்றார் ஔவையார். ஔவையார் கற்றதே கைம்மண் அளவு என்றால்…… நாங்கள் எங்கே….? நீதித்துறை தொடர்பான அறிவும் அந்தளவே! ”தூக்கனாங் குருவி ஒன்று அதியுயரழுத்த பாயும் மின்சாரக் கம்பியில் தாண்டவமாடுகின்றது நான் அதிலேறி ஆடினால் என்ன….?” என்று சிந்திப்பவராகத்தான் முதல்வர் விக்கி ஐயாவின் செயற்பாடும் உள்ளது.

நாட்டில் சட்டம், நீதி என்பன அனைவருக்கும் பொதுவானவை. நீதி அரசர் குற்றமிழைப்பாகில் அது குற்றமல்ல என்றில்லை . பசுவின் அலறல் கேட்ட மனுநீதிகண்ட சோளன் அதன் துயர் துடைக்க தன் ஒரேயொரு மகனையே காவுகொண்டு நீதியைக் காத்தான். ஆனால், இங்கு நீதியரசராகச் செயற்பட்ட முதல்வர் விக்கி ஐயா, நீதிமன்ற அழைப்பை உதாசீனம் செய்தமையால் அவருக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுமத்தப்பட்டுள்ளது. அவர் காலைச்சுற்றிய பாம்பாக அது மாறியுள்ளது. அந்த வழக்குக்கான தீர்ப்பு மே மாதம் வழங்கப்பட இருக்கின்றது. ஏப்ரலில் தேர்தல் நடந்தால் விக்கி ஐயா தப்பித்துவிடுவார். ஆவணியில்தான் தேர்தல் என்றால் மே மாதத்தில் வழங்கப்பட இருக்கின்ற தீர்ப்பு, விக்கி ஐயாவுக்கு எதிராக – அவரது அரசியல் கனவைத் தவிடுபொடியாக்குவதாக – அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அமைச்சர் டெனீஸின் வழங்கு மேல் நீதி மன்றத்தில் ஆராயப்பட்டு, வடக்கு மாகாண ஆரம்ப காலம் முதல் இன்றுவரை டெனீஸ் அமைச்சராகவே உள்ளார் என்று மேன்முறையீட்டு நீதி மன்று கூறி, உடனடியாக அவர் கடமைகளை மீண்டும் ஏற்க ஆவணசெய்யவேண்டும் என்று ஆளுநருக்குப் பரிந்துரை செய்தும் அதனை நீதியரசர் முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்க மறுத்தார்.   சட்டவிரோதமாக பதவிநீக்கப்பட்ட டெனீஸ்வரனுக்குரிய – அமைச்சருக்குரிய – 4 மாத சம்பளத்தை மாகாண அமைச்சு கடந்த மாதம் வழங்கியுள்ளது. இதேவேளை, டெனீஸின் அமைச்சைப் பங்கிட்டு முதல்வரால் கொடுக்கப்பட்ட அவரது அல்லக்கைகள் அனந்தி சசிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பவான்) ஆகியோரதும் அவர்களின் அமைச்சுகளுக்கு முறைகேடாக நிறுத்தப்பட்ட பணியாளர்களின் சம்பளங்களும் மீளப்பெறவேண்டிய ஒரு சட்டச்சிக்கல் உள்ளது.

டெனீஸ் விவகாரத்தில் அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ அதிகாரம் தனக்கிருக்கின்றது என்ற ஆணவத் திமிருடன் முதல்வர் விக்கி, அந்த அதிகாரத்தை சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டு ஆற்றத் தவறியமைதான் இங்கு பிரச்சினையான விடயமாக உள்ளது.

இது இவ்வாறிருக்க, வடக்கு மாகாண அரசை முதல்வர் விக்கி நிர்வகித்த விதம் இன்று சந்தி சிரிப்பதாக உள்ளது. அவர், தான் சார்ந்த கட்சியை மதிக்கவில்லை. தனது அமைச்சரவையை மதிக்கவில்லை. தன்னை சுயாதீனமாகச் செயற்பட ஆளுநர் விடவில்லை என்று சகல ஆளுநர்களையும் குறைகூறும் விக்கி, தனது அமைச்சரவையில் திறம்பட சேவையாற்றிய அமைச்சர்களான சத்தியலிங்கம், டெனீஸ் ஆகியோர் மீது பொறாமையுற்று அவர்கள் சுயாதீனமாகச் சேவையாற்றுவதைத் தடுத்து, அவர்களுக்கு முட்டுக்கட்டை போட்டார். தன்னோடு அரச அவையிலுள்ள உறுப்பினர்களை மதிக்கவில்லை. எல்லாம் புரிந்தவர் தான் என்று செயற்பட்டார். ஆனால், சரியான நிர்வாக நடைமுறையையும் அவரது அமைச்சரவை ஆற்றத் தலைப்படவில்லை .

இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் எமது வடக்கு மாகாணத்தில்தான் கல்விப்புலத்தில் உயர் சான்றோர்கள் உறுப்பினராக இருந்தனர்.. பல வைத்தியர், பல பொறியியலாளர்கள், பல சட்டத்தரணிகள், பல கல்வியியலாளர்கள், பல நிர்வாக அதிகாரிகள் என்று வடக்கு மாகாண அரசு ஒரு நிறைவான அறிவுடை அரசாக இருந்தது. அமைச்சரவை ஆரம்பத்தில் நிறுவியபோது அமைச்சர்களாக இருந்த ஒவ்வோர் அமைச்சர்களும் அந்தந்தத் துறையில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.

ஆனால், அமைச்சர்கள் – முதல்வர் முரண்பாடு, முதல்வர் – உறுப்பினர்கள் முரண்பாடு ஆகியவற்றால் இன்று சகல மாகாண சபைகளையும் விட கீழ் நிலைக்கு வடக்கு மாகாணசபை சென்றமைக்கும்  முதல்வர் விக்கிதான் காரண கர்த்தா.  இதுக்குள்வேறு அவர் மாற்றுத் தலைமை என்ற ஒன்றை பதவிமோகத்தால் ஏற்றிருக்கின்றார்.

முதல்வர் தலைமையிலான மாகாண அரசு, தனது 5 வருடக் காலப்பகுதியில்   மக்களுக்கு என்ன பணியை ஆற்றியது, எத்தனை உப விதிகளை இயற்றியது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது என்றால் அனைத்துக்கும் விடை பூஜ்யமே!

ஆசை யாரைத்தான் விட்டது. ஒர் ஆன்மீகவாதி வேடமிட்டு, பற்றற்று இருந்த விக்கி ஐயாவை, லவ்வீக மாகாணசபை என்ற சுகபோக வாழ்வைக் கூட்டமைப்பு காட்டியமையால், அவர் இன்று அந்த சுகபோகத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றார். “ஒட்டையும் செம்பொன்னையும் ஒன்றாக நோக்கிய” விக்கி ஐயா, இன்று செம்பொன்னை மட்டுமே நோக்குபவராகினார். ஆட்சிப்பீடத்தின் மேல் இருந்த அதிகார மோகத்தால் கட்சிக்குப் பல அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் பதவியேற்றதன் பின்னாக வந்த சகல தேர்தல்களிலும் தான்சார்ந்த தமிழரசுக் கட்சியைத் தோற்கடிக்கவேண்டும் என்றே வேலைசெய்தார். ஆனாலும், இவரது பேச்சு மக்கள் மத்தியில் எடுபடவில்லை .

தொடர்ந்தும் – தனது இறுதிக்காலம் வரை – வடக்கு மாகாண முதலமைச்சராகத் தான் இருந்தால் என்ன என்று எண்ணலாகினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் ஓர் உறுப்பினராக இருந்து தேர்தல் களத்தில் மக்கள் ஆணைக்காக நின்று, அவர்களின் ஆணையைப் பெற்று வடக்கு மாகாண முதல்வர்” என்ற உயரிய அரசியல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றும், அதனால் – தன் செயற்றிறனின்மையால் – எதுவும் ஆற்றமுடியாது என்று சிந்தித்த விக்கி ஐயா, எதற்கும் உதவாத – மக்கள் அங்கீகாரமோ, சர்வதேச அங்கீகாரமோ எதுவும் அற்ற – தமிழ் மக்கள் பேரவை என்ற ஒர் அமைப்பைத் தேவையில்லாமல் உருவாக்கினார். அதை உருவாக்குகின்றபோது அதை ஒரு மக்கள் அமைப்பு என்றார் விக்கி.  கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவிக்கு ஆசைப்பட்ட விக்கி, அது கிடையாது என்று உறுதியாகத் தெரிந்ததும் தனக்கு முதல்வர் பதவியைத் தியாகம் செய்த மாவைக்கும், தன்னை அரசியலில் கொண்டுவந்து அறிமுகப்படுத்தி தள்ளாத வயதிலும் வடக்கு மாகாணத்தின் சகல கூட்டங்களிலும் மேடைமேடையாக ஏறி அதிகூடிய வாக்குப் பிச்சையைப் பெற்றுத்தந்த சம்பந்தன் ஐயாவுக்கும், தன்குருவென நினைந்து, தனக்குமேலான ஒரு கௌரவத்தை ஏற்படுத்திக்கொடுத்த சுமந்திரனுக்கும் வளர்த்தகடாவாகி அவர்கள் மார்பில் நன்றிகெட்டு பாய்ந்தார் விக்கி.

தற்போது மாற்றுத் தலைமைக்காக தான் ஆசைப்பட்ட தலைமைப் பதவியைக்கொண்டு, தனது எடுபிடிகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கட்சியை உருவாக்கும்படி கூறி, பின் அத்தனையையும் இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கினார் விக்கி. இதில் வேடிக்கை என்னவென்றால் அனந்தியின் கட்சிக்குள் அவரைத தவிர எவரையுண மக்களுக்குத் தெரியாது.சிறிகாந்தாவின் கட்சியில் அவரோடு அரசியல்கோமாளி சிவாஜி மட்டும்தான். விக்கியரின் அணியில் விக்கியொடு அருந்தவபாலன், சுரேஸ் அணியில் சுரேஸரும் அவர் தம்பியும், சிலசக்தியும். இதுதான் மாற்றுத் தலைமை.

கூட்டமைப்பில் தலைமைப் பதவி கிடைக்காதவர்களும், மக்களால் கடந்த காலத் தேர்தல்களில் கடாசி வீசப்பட்டவர்களும் அரசியல் போக்கிடமற்று உருவாக்கியதே மாற்றுத் தலைமை.

தமிழ் மக்கள் விநயமாக விக்கியிடம் வேண்டும் கோரிக்கை இது. தமிழர்கள் ஆளத் தெரியாதவர்கள் என்று வடக்கு மாகாணசபையின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் முதல்வர் விக்கி நிரூபித்துவிட்டார். இனியும் வடக்கு வாழ் தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஒர் இருண்ட யுகம் வேண்டாம். அவர்கள் மக்கள் சேவையுள்ள அரசியலில், அனுபவமும் முதிர்வும் கொண்டு மக்கள் வலி உணர்ந்த ஒரு தலைமையையே விரும்புகின்றார்கள். 

அதற்குரியவர்கள் – அரசியல், ஆளுமை, சாணக்கியம், தலைமைத்துவம் ஆகிய சதுர்குணம் படைத்தவர்கள் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். அவர்களை மக்கள் தெரிவுசெய்வர்.

விக்கியின் கூட்டணியைக் கண்டு பயந்து நான் இந்த ஆக்கத்தை வரையவில்லை. பயப்படும் அளவுக்கு அதில் உள்ளவர்கள் எவரும் சாதித்த சாதனையாளர்களும் அல்லர். அதில் உள்ள அனைவருக்கும் சாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் கோட்டை விட்டவர்கள்தான் உள்ளார்கள்.

ஆனால், வேதனையான விடயம் என்னவென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சிரமத்தின் மத்தியில் கட்டிக்காத்த ஒன்றுமையை – 2001 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் எமது வடக்குக் கிழக்கு வாக்குவீதத்தை ஒப்புநோக்கினால் தெரியும். 25 -30 வீதத்துக்கு மேல் அதிகரித்தமை கிடையாது. அப்போ நாட்டின் ஜனநாயகத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அந்த வீதத்தை 70 இற்கு மேல் கொண்டுவந்த பெருமை கூட்டமைப்பையே சாரும். அந்த ஒற்றுமையை மீண்டும் சீர்குலைத்து தமிழரை நற்றாட்டில் விடுவதற்கு அரசால் அனுப்பப்பட்ட முகவரே வாசுதேவவின் சம்பந்தி விக்கி.

கடந்த 2015 ஆம் ஆண்டும் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்கை எதற்கும் உதவாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிதறடித்தமையால்தான் இன்று வெறும் 4 வாக்குகள் கிடைக்காதமையால் விஜயகலா எம்.பி.ஆனார். ஒரு பெரும்பான்மைக் கட்சிக்கு வடக்கில் ஆசனம் பெற்றுக்கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சாரும். அதேதவறை தற்போது விக்கி – மொட்டுக்கோ, வெற்றிலைக்கோ, யானைக்கோ, வீரனைக்கோ பெற்றுக்கொடுக்கக் கங்கனம் கட்டியுள்ளார். விக்கியின் இந்த சாம்பாறு கூட்டணியோ அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ நாடாளுமன்ற உறுப்பினராவது வெறும் பகற்கனவே. ஆனால், எமது வாக்கைச் சிதறடித்து பெரும்பான்மைக் கட்சிகளின் ஆசனத்தை அதிகரிப்பதற்கே இவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றார்கள். மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

இவர்களின் செயற்பாடு,

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”    என்ற நிலைமைதான்.

 

 

 

Share the Post

You May Also Like