புதுக்குடியிருப்பில் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை, உரிமையாளர்களை பதிவு செய்யுமாறு கோரும் தவிசாளர்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் செல்லையா பிரேம்காந் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும், தமது கால்நடைகள் தொடர்பான விடையங்களை, தமது பகுதியிலுள்ள பிரதேசசபையின் உப அலுவலகங்களில் பதிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்புப் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை உரிமையாளர்கள், அவர்களுடைய கால்நடைகள் தொடர்பான விடயங்களை அந்தந்தப் பகுதி பிரதேசசபை உப அலுவலகங்களில் பதிவு செய்யவேண்டும். என இம்மாத சபை அமைர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக நெற்செய்கைக் காலங்களில், கால்நடைகள் நெற்செய்கை பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

எனவே அந்த நேரத்தில், அவ்வாறு பயிர் நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் கால்நடைகளின் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் பாரிய இடர்பாடுகள் நிலவுகின்றன.

இதனைவிட வீதி விபத்துக்குள்ளாகி கட்டாக்காலி கால்நடைகள் இறந்திருப்பின், அந்தக் கால் நடைகளின் உரிமையாளர்களை இனங்காணுவதில் பாரிய சிக்கல் நிலவி வந்துள்ளது.

இவ்வாறு பதிவொன்று இருக்குமாயின், இப்பதிவினூடாக் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதும் இலகுவாக இருக்கும்.

எனவே இதனைக் கருத்தில்கொண்டு, புதுக்குடியிருப்புப் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள், அவர்களது பகுதிக்குரிய பிரதேசசபை உப அலுவலகங்களில்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

Share the Post

You May Also Like