பேரினவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரப் பரவலாக்கம் மாத்திரமே ஒரே வழி – பிரிட்டன் எம்.பியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

இலங்கை வந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்றத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இரா. சம்பந்தன், சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

“தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோதக் குடியேற்றங்கள் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இடம்பெறும் வரையில் தமிழ் மக்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைக்கவில்லை.

அதேவேளை, அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தனிநாட்டுக் கொள்கையை தமிழ் மக்கள் கைவிட்டனர்.

13ஆவது திருத்தச் சட்டம் ஒரு முன்னேற்றகரமான ஒரு படியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அதிகாரப் பரவலாக்கத்துக்கு அது போதுமானதாக இருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் 13ஆவது திருத்தச் சட்டத்தையும் தாண்டிய ஒரு அதிகாரப் பரவலாக்கத்துக்கு அடிகோலும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

பல வரைபுகள் முன்வைக்கப்பட்டாலும் இன்றுவரை ஒரு தீர்வை நாம் கண்டுகொள்ளவில்லை.

வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல முழு நாடும் செழிப்படைய வேண்டும் என்பதே எமது விருப்பம். அதிகாரப் பரவலாக்கமானது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. மாறாக அது அனைத்துப் பிரதேசங்களுக்கும் அமுலாக்கப்படும் ஒன்று.

மக்கள் தமது கருமங்களை செய்து கொள்ளும் வகையில் அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“நாங்கள் தவறான ஒன்றையோ அல்லது அநீதியான ஒன்றையோ கோரவில்லை. எமது கோரிக்கையானது நியாயமானது. அது உலகில் பல்வேறு நாடுகளில் பிரயோகத்தில் உள்ள ஒன்று.

இலங்கை அரசு உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் ஒரு நியாயமான தீர்வை தேசிய பிரச்சினைக்குக் கண்டுகொள்ளலாம்” என்றும் இரா.சம்பந்தன் இதன்போது மேலும் கூறினார்.

எம்.ஏ.சுமந்திரன்

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போது, பேரினவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமேயானால் அதிகாரப் பரவலாக்கம் மாத்திரமே ஒரே வழி” என்று சுட்டிக்காட்டினார்.

“அதிகாரப் பரவலாக்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண வழிவகுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசின் நிலைப்பாடு தொடர்பில் பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், “இந்த அரசும் ஒரு புதிய அரசமைப்பு வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைக் கண்டுகொள்ளும் வகையில் அந்தப் புதிய அரசமைப்பு அமைய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

“தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுபட்ட பிரிவுபடாத நாடொன்றினுள் அதிகாரப் பரவலாக்கத்துக்கு வாக்களித்து வந்துள்ளார்கள். அவர்களது அந்த ஜனநாயகக் கோரிக்கையை ஆட்சியாளர்கள் மதிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியின்மை, வறுமை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பிரச்சினைகள் மற்றும் வேலையின்மை போன்ற ஏனைய அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தமிழ் மக்கள் முகங்கொடுத்து வருகின்றார்கள்.

நாட்டில் நிலவுகின்ற ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வருவதில்லை.

ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை அடையும் பட்சத்தில் நாம் பல முதலீட்டாளர்களை விசேடமாக புலம்பெயர் மக்களை முதலீடு செய்யும்படிக்கு எம்மால் கவர்ந்துகொள்ள முடியும்.

இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். பெரும்பான்மை மக்கள் சரியான திசையிலே வழிநடத்தப்பட்ட வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோரிக்கைகைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதன் விளைவாகவே பிரிவினைவாதம் உருவானது. எனவே, நிரந்தரமான தீர்வொன்றைக் கண்டுகொள்ளும் வகையிலும் கடந்தகால சம்பவங்கள் மீள் நிகழாத முறையிலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தியோடு செயற்பட வேண்டியது மிகவும் அவசியம்” – என்றும் இதன்போது எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறினார்.

 மல்க்கம் ப்ருஸ்

இந்தச் சந்திப்பின் இறுதியில் கருத்துத் தெரிவித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இரா.சம்பந்தனின் பங்களிப்பைப் பாராட்டிய அதேவேளை, சம்பந்தன் எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் ஆக்கபூர்வமானது எனவும், தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானது எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில்  சம்பந்தனின் தெளிவான நியாயமான அமைதியான நடைமுறைகள் மெச்சத்தக்கது எனவும், தொடர்ந்தும் ஒரு நியாயமான தீர்வை அடையும் நோக்கில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட பிரிட்டன் தயாராக உள்ளது எனவும் அவர் கூறினார்.

Share the Post

You May Also Like