சர்வதேச நீதி விசாரணைகள் மூலமே பொறுப்புக்கூறலை நிலைநாட்ட முடியும்- யோகேஸ்வரன்

சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலமே பொறுப்புக்கூறலையோ, உண்மையைக் கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என  நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “தற்போதைய ஆட்சிக்காலத்தில் அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன. கடந்த 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையில் நாங்கள் சோதனைகளுக்கு உட்படுவது மிகவும் குறைவாகேவே இருந்தது. இன்று வடகிழக்கில் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல செயற்பாடுகள் வரவிருக்கின்றன.

முன்பு சிவில் பகுதிகளுக்கு இராணுவத்தினை நியமிக்கும் நிலைமைகள் இருக்கவில்லை. தற்போது உயர் நிலைகளில் உள்ள சிவில் பகுதிகளிலுக்கெல்லாம் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றார்கள். கோட்டாபயவின் ஆட்சியில் இவை வந்துவிட்டன. இன்னும் பல செயற்பாடுகள் வரலாம். இது தொடர்பாக நாங்கள் அவதானமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகவுள்ளது.

ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை, இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினை தற்போதைய அரங்கம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் நிராகரிக்கின்றோம் எனக் கூறியுள்ளனர். அவர்கள் உள்ளகப் பொறிமுறையிலான விசாரணைக்குத் தயார் என்றும் கூறியுள்ளனர். அதனை நாங்கள் எந்தவகையில் நம்பமுடியும்?

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தனக்கு பிரதம உயர் நீதிமன்ற நீதியரசர் ஆதரவு வழங்கவில்லையென்பதற்காக அவரை பதவி நீக்கிய செயற்பாட்டினை நாங்கள் கண்டோம். அவ்வாறான செயற்பாடு தற்போதும் நடைபெறாது என்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? நீதி எந்தவகையில் நிலைநாட்டமுடியும் என்ற கேள்வியும் உள்ளது.

உள்ளக பொறிமுறைமூலம் எங்களுக்குத் தீர்வு கிடைக்காது. அவ்வாறு நீதித்துறை சரியான முறையில் கஷ்டப்பட்டு செயற்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினாலும் பொதுமன்னிப்பு என்ற ரீதியில் இராணுவ அதிகாரிகள், குற்றவாளிகள் விடுதலையாகின்றனர்.

கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிகளும் அவரால் யாருக்கும் தெரியாது இரகசியமான முறையில் விடுதலை செய்யப்படுகின்றனர்.

எனவே, சர்வதேச நீதி விசாரணைகள் மூலமே பொறுப்புக்கூறலையோ நீதி நிலைநாட்டலையோ, உண்மையைக் கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்த முடியும். தமிழ் மக்களை பௌத்த தீவிரவாதம் மூலம் அடக்கும் முயற்சியாகவே பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

Share the Post

You May Also Like