தடம்மாறி வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன்! சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

சுமந்திரன் என்ன செய்தார்?

இப்ப அரசியலுக்காக செய்கிறார்?
இது அவர் அரசியலுக்குள் புகுமுன் நடந்தது!t
சுமந்திரனை விமர்சிப்பவர்களுக்கு….!

கீழேயுள்ள பதிவு இன்று சமூகத்தில் பிரபலம்மிக்க ஒரு வைத்திய நிபுணருடையது. அவர் வேறுயாருமல்லர், அனைவருக்கும் நன்கு பரிட்சயப்பட்ட சமூக மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன். அவர் தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை – தடம்மாறவிருந்த தன்வாழ்வில் ஒளியேற்றி இன்று ஓர் பிரபலம்மிக்க வைத்திய நிபுணராக உருவாகக் காரணமாகிய – வெளிநாடுசென்று பெற்றோல்செற்றில் பெற்றோல் அடிப்பதைத் தடுத்த – எம்.ஏ.சுமந்திரன் தனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்த தன்னலம் கருதா பன்பற்றி – இன்று பலரும் பலவாறு அவரை விமர்சிப்பதை நெஞ்சுபொறுக்காமல் – நிலைகெட்ட மாந்தரின் செயலுக்கு முடிவுகட்ட எண்ணி, தன் வாழ்வில் பொதிந்துகிடந்த உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார். இந்த செய்தி முகநூல்களில் வைரலாகப் பரவி வருகின்றது. ஆயினும் அவரிடம் இவ்வாறான சம்பவம் நடைபெற்றதா என்பதை ‘புதிய சுதந்திரன்’ ஆசிரியபீடம் உறுதிப்படுததிய பின்னர் அவரின் அனுமதியோடு இந்தத் தகவவல் பிரசுரிக்கப்படுகின்றது..

எனது வாழ்க்கையின் முக்கிய பகுதி ஒன்றை தற்போதைய சூழ்நிலை காரணமாக இன்று முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2009 ஆம் ஆண்டில் வன்னி முகாம்களில் பலவந்தமாக அடைத்து வைக்கப் பட்டு இருந்த தமிழ் மக்களின் சுகாதார நிலை தொடர்பாக கேள்வி எழுப்பி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதை தொடர்ந்து தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்குவதில் முழுமூச்சாக ஈடுபட்டு இருந்த இனவாத அரசினால் நான் பதவி இடைநிறுத்தம் செயப்பட்டு சம்பளமும் இன்றி 13 மாதம் அநாதரவாக இருந்த காலம்.

உறவினர்கள், நண்பர்கள் கூட தாங்களும் பழிவாங்கப் படலாம் என்று கருதி திருமண அழைப்பிதழைக் கூட தராத காலம். அந்த நேரத்தில் உதவி கோரி தற்பொழுது தமிழருக்காக வீர வசனம் பேசுபவர்கள் உட்பட பல தமிழ் தலைவர்களை அணுகி இருந்தேன். எந்த உதவியும் செய்யாமல் நல்ல வழக்கறிஜராக பார்த்து அமர்த்துங்கள் என்று ஆலோசனை கூறியோர் சிலர்.

நாட்டை விட்டு தப்பி ஓடுமாறு ஆலோசனை கூறியோர் சிலர் . இனப்படுகொலை்யாளி மகிந்தவின் தமிழ் அடிவருடிகளை பிடித்து காலில் விழுந்து மீண்டும் பதவியை தக்க வைக்குமாறு கூறியோர் பலர் .

இறுதியாக முன் அறிமுகம் இல்லாத நிலையில் திரு #சுமந்திரன் அவர்களை சந்தித்து உதவி கேட்டேன் .

சுமந்திரன் தானாகவே முன்வந்து எந்த வித கட்டணமும் இன்றி என்னுடைய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நடத்தி தருவதாக தெரிவித்து அதன்படியே வழக்கை வென்று 13 மாத சம்பளத்துடன் என்னை மீண்டும் வேலைக்கு அமர்த்தினார் .

அவர் அன்று எனக்கு உதவி செய்து இருக்கவிட்டால் அனேகமாக 2010இல் இருந்து கனடாவில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தான் பணி புரிந்து கொண்டு இருந்து இருப்பேன். அவருடைய வீட்டுக்கு எனது வழக்கைப் பற்றிக் கதைக்க செல்லும் போது என்னைப் போல எத்தனையோ அநாதரவான தமிழர்களுக்கு அவர் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி உதவுவதை அறிந்து கொண்டேன்.

இத்தகைய உயர்ந்த மனிதரை இலக்கு வைத்து கேவலம் ஒரு தேர்தலில் வெல்வதற்காக, இனவாத அரசாங்கத்துடன் இணைத்து கடந்த காலத்தில் தமிழர் படுகொலையில் ஈடுபட்டவர்களைக் கூட கண்டிக்காமல், ‘தமிழ் இனத் துரோகி’ என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?

இந்தப் பதிவை பிரதி செய்து முகநூலில் மீள் பதிவிடவும் இணையத்தளங்களில் பிரசுரிக்கவும் நான் இத்தால் அனுமதி அளிக்கிறேன். இணைப்பை பகிர்ந்தால் இணையத் தள செய்தி மாத்திரமே பிரதி செய்யப் படும் என்பதை கவனிக்கவும்

#வைத்தியர்_முரளி அவர்களின் வாக்குமூலம் (2015 )

அரசியலுக்காக வழக்காடுபவர் அல்லர் . இனத்தின் தேவைக்காக வழக்காடுபவர் எம்.ஏ.சுமந்திரன்.

Share the Post

You May Also Like