கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கும்” சாமத்தியன் சாணக்கியன் சுமந்திரன்!

– தெல்லியூர் சி.ஹரிகரன் –

தமிழ் அறிஞர்கள் சிறந்த சாணக்கியம் படைத்தவன் என்பதற்குக் ”கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கும்” ஆற்றல் படைத்தவன் என்று ஒரு பழமொழி கூறுவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் செயற்பாட்டை ஒப்புநோக்கும்போதும் எனக்கு அந்த ஞாபகம்தான் வருகின்றது.

பாலைக் கடைந்து, வெண்ணெய் எடுத்தபின் மிஞ்சுவதுதான் மோர். ஆனால், அறிவும் சாணக்கியமும் மிக்க – புத்திசாதுர்யம் படைத்த – மதிநுட்பம் கொண்ட – சுமந்திரன், அந்த மோரைக் குடைந்து மீண்டும் வெண்ணெய் எடுக்க முயற்சிக்கின்றாரோ என்று அவரது அரசியல் சாமர்த்தியம் வெள்ளிடைமலையாகப் புலப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக் களகத்தில் சிங்கள பீடத்தில் – சிங்கள பெரும்பாண்மை மாணவர்கள் மத்தியில் -அறிவுடைசார் ஆளுமைத்திறன்கொண்ட சிங்கள பேராசிரியர்கள் முன்னிலையில் – ‘தமிழ்த் தேசிய இனத்துவம்’ என்ற தலைப்பில் அண்மையில் உரையாற்றியிருக்கின்றார் சுமந்திரன்.

தென்னிலங்கையின் அறிவுசார் பீடத்தில் வைத்து – ஆற்றல்மிகு ஆளுமைத்திறனும் ஆழ்ந்த அறிவும்கொண்ட பௌத்த பேரினவாத பேராசிரியர்கள் முன்னிலையில் – தனியொருவனாகநின்று துணிச்சல்மிகு வீரம்ததும்ப தன் அறிவுமிகுவார்த்தைகளால் பல்குழல்தாக்குதல் நடத்தி சிங்களப் பெரும்பாண்மை வாதிகளின் – பௌத்த மேலாதிக்க வாதிகளின் – அறிவுக் கண்ணைத் திறந்திருக்கின்றார் சுமந்திரன்.

”இது சிங்களவர் தேசம் என்றால் இங்கு தமிழர் தேசமும் இருக்கும்” என்று அழுத்தம் திருத்தமாகவும் – மிகுந்த நிதானத்துடனும் – ஆணித்தரமாகவும் – உறுதியாகவும் இடித்துரைத்திருக்கின்றார் சுமந்திரன் எம்.பி.

”சிங்கள இனம் எவ்வளவுக்கெவ்வளவு தொன்மையானதோ, அதிலும்விட ஒருபடி மேலாக இந்த இலங்கையில் தொன்மையும் பழைமையும் வாய்ந்த மூத்த பழங்குடி தமிழினம். சிங்களவருக்கு இந்த நாட்டில் என்னென்ன உரிமைகள் – சலுகைகள் – வழங்கப்படுகின்றனவோ அந்த உரிமைகளும் சலுகைகளும் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழும் தமிழ் இனத்துக்கும் வழங்கப்படவேண்டும். இது சிங்கள தேசம் என்றால் – வடக்கே தமிழர் தேசம் என்று ஒன்று உண்டென்பதை யாரும் மறந்துவிடக்கூடாது”. – என்று தனது ஆழ்ந்த புலைமைமிக்க ஆக்கிலச் சொற்களால் ”வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல்” சிங்கள மக்களின் மண்டைகளைக் கழுவியிருக்கின்றார் சுமந்திரன் எம்.பி.

தன்மீது பல்வேறு விமர்சனங்களால் – தகாத வார்த்தைப் பிரயோகங்களால் – எல்லாம் சில குறுகிய சிந்தனைகொண்ட – மக்களால் நிராகரிக்கப்பட்ட – அரசியல் ஞானமற்ற – உதிரிக் கட்சிகள் சொல்லம்புகளால் நடத்தும் தாக்குதல் அனைத்தையும் பொருட்படுத்தாமல், சொல்லவேண்டிய விடயத்தை, சொல்லவேண்டிய இடத்தில் சொல்லியிருக்கின்றார் சுமந்திரன்.

அரசியல் ஞானமற்று – பேரனின் – தந்தையின் – பெரைப் பயன்படுத்தி, கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் அரசியலுக்குள் புகுந்து, தானும் அரசியல் வாதி – சட்டத்தரணி – என்று, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் அரசியல் வாதியாக, எந்தக் கோட்டும் இதுவரை கோட்போட்டு ஏறாத சட்டத்தரணியாக இங்கு வந்துள்ள சைக்கிள்குமார் கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சினைக்குரியவர் சுமந்திரனே!

இந்த சைக்கிள் குமாரின் பேரன் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் செயற்பட்டமையால்தான், தந்தை செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை, காங்கிரஸிலிருந்து பிரிந்து உருவாக்கினார் என்ற வரலாற்றைத் இலங்கைவாழ் தமிழ் மக்கள் என்றைக்கும் மறக்கர்.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முக்காலமும் உணர்ந்த முதுபெரும் ஞானியாகிய பிரபாகரன் உருவாக்குகின்றபோது எதற்காக அதன் தலைவராக சம்பந்தரையும் செயலாளராக மாவை சேனாதிராஜாவையும் நியமித்தார்? பல கட்சிகள் அங்கம் வகித்தாலும் கூட்டமைப்பின் சின்னமாக- எதற்காக அவர் தமிழரசுக் கட்சிச் சின்னமாகிய வீட்டைத் தெரிவுசெய்தார்?

”தன்னால் உருவாக்கப்பட்ட இந்தத் தலைமை என்றைக்கும் தடம் மாறக் கூடாது. சிங்களத்திடம் தமிழினம் விலைபோய்விடக் கூடாது”. – என்ற ஒரே காரணத்துக்காகத்தான் பிரபாகரன், தமிழரசுக் கட்சியையும் சம்பந்தரையும் மாவையையும் முதன்மைப்படுத்தினார்.

இன்றைக்குப் பலர் பல விதமாக வெகுளிக்கூத்தாடலாம். ஆனால், தற்போது தமிழருக்குள்ள ஒரேயோர் ஆயுதம் நிதானமும் சாணக்கியமும்தான்.

நாம் தற்போது சிங்களத்திடம் அதட்டி – சமஅந்தஸ்துடன் – பேரம்பேசும் – வலிமை அற்றவர்களாகவே உள்ளோம். முன்பு சம அந்தஸ்துடன் இருந்தோம். எமக்குப் பின்னால் கடல், தரை, விமானம் என்ற முப்படை இருந்தது. ஓர் குட்டி அரசாங்கம் இங்கே செம்மையாகவும் செங்கோலாகவும் நடத்தப்பட்டது. நாம் தமிழன் என்ற பெருமையுடன் தலை நிமிர்ந்து நடந்தோம். சர்வதேசமே எம்மைக் கண்டு அஞ்சியது. போராட்ட குணம், வெறி, தேசியப் பற்று, தளராத இலட்சியம் இருந்தது.

இன்றைக்கு எம்மிடமிருந்த அரசு சர்வதேசத்தின் சூழ்ச்சியால் மௌனிக்கப்பட்டுவிட்டது. சம அந்தஸ்துடன் பேரம்பேசும் திராணியற்று நாதியற்ற அநாதைகள் போல் எம் இனம் இன்று உள்ளது. லௌவீகத்துக்குள் மூழ்கிப்போய் உள்ளது. போராட்ட குணம், வெறிக்குப் பதிலாக, போதைவெறி தலைக்கேறி எம்மைநாமே – எமது இனத்தையே நாம் அழிக்கின்ற – கொரூர வன்ம மனம் படைத்த சமூகமாக எமது சமூகம் மாறிக்கொண்டிருக்கின்றது. புலிகளையும், தேசியத் தலைவரையும் வைத்து அரசியல் கட்சிகள் குளிர்காய்கின்றன.

யுத்தத்தில் தமிழினம் கோரமாக அழிக்கப்பட்டு, இலங்கை அரசு காலிமுகத் திடலில் வெற்றிவிழா கொண்டாடியபோது தமக்கும் புலிகள் அழிக்கப்பட்டதிலும் தமிழினம் அழிக்கப்பட்டதிலும் பெரும் பங்கு உண்டு என்று பேரினவாதத்துடன் சேர்ந்து சிங்கள மக்களின் கைகொட்டுதலைப் பெறவேண்டும் என்று வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள். தமிழ்த் தேசியவாதிகள்.

இன்று சுரேஸ் – சம்பந்தன், சுமந்திரன், மாவையைக் குறைகூறுகின்றார். அவர் கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது – இந்தக் கூட்டுடன் தான் இருந்தபோது – எமது மக்களின் பிரச்சினைக்காக ஆற்றிய பணி என்ன? இனவழிப்பின்போது இவர் நாடாளுமன்ற உறுப்பினர். அப்போது இனம் அழிக்கப்பட்டமையைத் தடுப்பதற்கு அவர் ஆற்றிய பங்கு, பணி என்ன?

நான் விரிவாகவும் விளக்கமாகவும் கூறிவிட்டேன். இனி நாம் அதட்டிப் பெறும் திறனற்றவர்கள். இனியொரு யுத்தத்தையோ இனவழிப்பையோ எம்மினம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அதற்குரிய வெறியும் தமிழினத்தில் இல்லை. வெகுளிக்கூத்தாடிப் பயனேதுமில்லை. வீரம்செறிந்த அறிக்கைகளை விடியவிடிய எழுதி, வீராவேசத்துடன் மேடையில் முழங்குவதிலும் பயனில்லை. அதற்குக் கிடைக்கும் பரிசு வெறும் கை கொட்டுதல் மட்டும்தான்.

ஆகவே, சாணக்கியம்தான் ஒரே வழி. அதனை நிதானமாகவும், சரியாகவும், நேர்த்தியாகவும் பயன்படுத்தவேண்டிய தருணத்தில் பயன்படுத்தவேண்டும். யார் என்ன சொன்னாலும் அதற்குரியயவர்கள் சம்பந்தன் சுமந்திரன் கூட்டே! ”பைய மென்றால் பனையையும் மெல்லாம்” என்றொரு பழமொழியும் தமிழில் உண்டு. சம்பந்தர் சுமன் கூட்டு பைய மென்று பனைமரம் போன்ற தமிழர் உரிமையைப் பெறுவர் என்பது வெள்ளிடைமலை!

(2017 ஆம் ஆண்டு  எழுதப்பட்ட பத்தி எழுத்து)

Share the Post

You May Also Like