கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத விக்னேஸ்வரன் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போகிறாராம்!

நக்கீரன்

டக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான  க.வி.விக்னேஸ்வரன்  வடமராட்சி, தொண்டமானாறு, கெருடாவில் மாயவர் கோவிலடி குடியிருப்பு அருகில் கடந்த மார்ச் 03 இல் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். வழக்கம் போல தான் உத்தமன், சத்தியவான், கெட்டிக்காரன்  மற்றவர்கள் அயோக்கியர்கள், சக்கட்டைகள்  என்ற தோரணையில் பேசியுள்ளார்.

குறிப்பாக ததேகூ இன் பேச்சாளரும் நா.உறுப்பினருமான  ம.ஆ. சுமந்திரன் அவர்களை ஒருமையில் – ஒரு நபர் – என  விளித்துப் பேசியுள்ளார்.  தேர்தல் நெருங்க நெருங்க – தோல்வி பயம் பிடித்துக் கொள்ள  – அவரது பேச்சின் தரம் – மரியாதை மேலும் குறைந்து கொண்டு  போகும் என எதிர்பார்க்கலாம்.  மேலும் மோசமடையலாம்! இப்போது அவரது பேச்சில் காணப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அதற்குரிய பதிலையும் பார்ப்போம்.

        (1) போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு நபர் கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந்த நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண் டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளையோர்களை ஆயுதமேந்த வைத்தது என்பதை அவர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்று அந்த நபர் கூறப்போய் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திவிட்டார்.

பதில்: விடுதலைக்கு ஆயுதமேந்தி போரிட்டவர்களை சுமந்திரன் ஒரு போதும் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்தது கிடையாது. அரசு கட்டவுழ்த்துவிட்ட அரச பயங்கரவாதமே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்கான  காரணம் என்றுதான் சுமந்திரன்  தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அண்மையில்  தமிழ்த் தேசிய அரசியலில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் என்ற பொருளில் நடந்த   கலந்துரையாடலில் பேசிய சுமந்திரன் “யுதப் போராட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை. தங்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகப் போராடவில்லை. தங்களது உயிர் போனாலும் பரவாயில்லை  எங்களுடைய மக்களுக்கு உயிர் வேண்டும் என்று போராடியவர்கள். அந்த நிலைப்பாட்டை எந்தக் காலத்திலும் நாங்கள் துச்சமாகக் கருத முடியாது. மக்களுக்காகத் தங்களது உயிரையே மாய்த்துக் கொள்வதற்காகப் போராட்டக்களத்திற்கு சென்றவனுடைய அந்த அர்ப்பணிப்பு எங்களாலே போற்றப்பட வேண்டிய ஒன்று. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்காலத்தில் வி.புலிகளுக்கு தேநீர் கொடுத்த குற்றத்துக்காக, இடியப்பம் சாப்பிடக் கொடுத்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது சுமந்திரன் அவர்கள் சார்பாக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அது அவர் நேரடி அரசியலுக்கு வராத காலம். ததேகூ இன் சட்ட ஆலோசகராக இருந்த காலம். ஆனால் விக்னேஸ்வரன் போர்க்காலத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் முன் நிறுத்தப்பட்ட புலி ஆதரவாளர்களை எப்படி நடத்தினார்? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு என்னமாதிரியான  தண்டனை வழங்கினார்? அவர் கடுமையான தண்டனை வழங்கினார். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்தானே என்று  சிலர் வாதிடலாம்.  சட்டம் தனது கடமையைச் செய்வதை யாரும் குறை கூறமுடியாது என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ் – ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் – குற்றம் சாட்டப்பட்ட வி. புலி  சந்தேக நபர்களுக்கு சிங்கள நீதிபதிகள் கொடுத்த தண்டனையை விட இரட்டிப்புத் தண்டனையை விக்னேஸ்வரன் வழங்கினார்!

முதலமைச்சராக வந்த பின்னரும் ஆயுதக் குழுக்களோடு (ரெலோ, இபிஆர்எல்எவ், புளட்) தான் உறவு வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றார். அவர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப் போவதில்லை என்றார். பின்னர் என்ன நடந்தது? அதே குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கினார். தமிழ் அரசுக் கட்சி அமைச்சர்களை வெளியேற்றினார்.  அமைச்சர் பா. சத்தியலிங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என விக்னேஸ்வரனே நியமித்த மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு தீர்ப்பளித்த பின்னரும் மருத்துவர் சத்தியலிங்கம் பதவி விலக வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார். அதே போல் அமைச்சர் டெனீஸ்வரன் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் படவில்லை என்று விசாரணைக் குழு தீர்ப்பளித்த பின்னரும் அவரைப் பதவி விலக வேண்டும் என்று விக்னேஸ்வரன் அடம் பிடித்தார். டெனீஸ்வரன் மறுக்கவே விக்னேஸ்வரன் அவரைப் பதவி நீக்கம் செய்து விட்டதாக எழுத்து மூலம் அறிவித்தார். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் உரிமை முதலமைச்சருக்கு இல்லை அந்த அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்ற சட்ட அறிவு விக்னேஸ்வரனுக்கு – ஒரு முன்னாள் நீதியரசருக்கு – இல்லாது இருந்தது. இன்று என்ன நடக்கிறது? அதே பாதி ரெலோ, இபிஆர்எல்எவ் கட்சிகளோடு விக்னேஸ்வரன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளார்! இபிஆர்எல்எவ் கட்சியோடு விக்னேஸ்வரன் கூட்டணி வைத்துக் கொண்டதை இரசிக்காத  தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார்  கோபித்துக் கொண்டு போய்விட்டார்!

மருத்துவர் சத்தியலிங்கம், சட்டத்தரணி டெனீஸ்வரன் இருவருக்கும் எதிராக “பெட்டீசம்” போட்டவர் அனந்தி ஆவர். ஆனால் அவர் ஓர் ஆண்டுக்கு மேல் நடந்த விசாரணைக் குழுவுக்கு முன்னர் தோன்றி சாட்சியம் அளிக்க தவறிவிட்டார். தன்னை ஒரு “வீராங்கனை” என்று மற்றவர்களுக்குப் படம் காட்டும் அனந்தி ஏன் விசாரணைக் குழு முன் தோன்றி சாட்சியம் அளிக்கவில்லை? ஒரு கோழை போல் ஏன் பதுங்கிக் கொண்டார்!  அப்படியான ஒரு நேர்மையற்ற அரசியல்வாதிக்குத்தான் விக்னேஸ்வரன்  செஞ்சோற்றுக் கடன் கழிப்பது போலஅமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்!

        (2) மக்கள் வழமையாக இரண்டு முக்கிய கேள்விகளை முன் வைக்கின்றார்கள். ஒன்று – ஏன் இன்னொரு கட்சி? இரண்டு – உங்கள் கொள்கைகள் எவ்வாறு மற்றவர்களுடன் வேறுபடுகின்றது? இவை தான் அந்தக் கேள்விகள். நான் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினேன் என்பதை முதலில் உங்களுக்குக் கூறிவைக்கின்றேன். உயர் நீதிமன்ற நீதியரசராகக் கடமையாற்றிக் கிட்டதட்ட பத்து வருடங்கள் ஓய்வில் இருந்த என்னை வலுக்கட்டாயமாக அரசியலுக்குக் கொண்டு வந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். எல்லா தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து என்னை அழைத்தால் நான் அரசியலுக்கு வருவது பற்றிச்சிந்திப்பேன் என்றுகூறியிருந்தேன். ஐந்து கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன்.

பதில்:  ஐந்தல்ல நான்கு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் என்று விக்னேஸ்வரன் சொல்வது சரியே. தெருவில் போன சனியனை விலைக்கு வாங்கிய குற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, சுமந்திரன் போன்றவர்களைச் சார்ந்ததே என்பது உண்மையே.  உண்மையில் 2013 ஆம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராசா அவர்கள் கேட்பதாகவே இருந்தது. அவருக்கு தமிழரசுக் கட்சி உட்பட எல்லாக் கட்சிகளுமே தமது ஆதரவைத் தெரிவித்தன. ஆனால் சம்பந்தர் ஐயா ஒரு இளைப்பாறிய உச்ச மன்ற நீதிபதி ஒருவரை, புலிச்சாயம் பூசப்படாத ஒருவரை, வெளிநாட்டு இராச தந்திரிகளோடு பேசவல்ல ஆளுமை படைத்த ஒருவரை வட மாகாண சபையின் முதலமைச்சராக ஆக்கினால் தமிழர் தரப்புக்கு நல்லது என நினைத்தார். சம்பந்தர் ஐயாவின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத சுமந்திரனும் அந்த நிலைப்பாட்டோடு ஒத்துப் போனார். விக்னேஸ்வரனின் வருகைக்குத் தமிழ் அரசுக் கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது. நா.உறுப்பினர் சரவணபவன் மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளாராக நிறுத்தப்பட்டால் அவர் தோற்றுப் போவார் எனச் சொன்னார். ஒரு சிலர் அரசியலில் ஒரு துளியும் அனுபவம் இல்லாத ஒருவரை, தெருவால்  போன ஒருவரை,  இழுத்து வந்து முதலமைச்சர் நாற்காலியில் இருத்துவதை எதிர்த்தார்கள். இப்படி எதிர்த்தவர்கள் தீர்க்கதரிசிகள் என்பது பின்னால்தான் தெரிய வந்தது.  பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததுதான் கண்ட பலன்.

        (3) எனக்குப்  பெயரோ, புகழோ, பணமோ, அதிகாரமோ சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. எல்லாவற்றையும் ஏற்கனவே இறைவன் எனக்குத் தந்து உதவியிருந்தான். தமிழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவையைச் செய்வோமே என்று நினைத்துத்தான் வர ஏற்றுக் கொண்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கை எனக்குத் தரப்பட்டது. எமது அரசியல் வேணவாக்கள் என்ன என்பதை அதில் இருந்து புரிந்து கொண்டேன். ஆனால் காலம் செல்லச் செல்ல எமது ஆவணப்படுத்தப்பட்ட குறிக்கோள்களுக்கும் எமது நடை முறைகளுக்கும் இடையில் பெரும் இடைவெளியை நான் காணநேர்ந்தது. குறிப்பாக 2015 ஜனவரி 8ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாட்சி அரசுடனான எமது உறவுகள் மிகவும் நெருக்கமுற்ற தாகவும் சரணாகதி நோக்கிச் செல்வதையும் நான் உணர்ந்தேன்.

பதில்:  அரசியலில் விக்னேஸ்வரன் ஒரு கற்றுக்குட்டி என்பதை அவரது இந்தப் பேச்சுக் காட்டுகிறது. அரசியல் தத்துவம் (political philosophy) என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் (issues) குறித்த கருத்தியல் சுருக்கங்களில் (conceptual abstractions) ஈடுபடும் தத்துவப் பிரிவு ஆகும். அரசியலில் இராசதந்திரம் அல்லது சாணக்கியம் தேவை. அரசிலில் வெள்ளை – கருப்பு எனத் தனித்தனியா அதனைப் பார்க்க முடியாது.  கருப்பு – வெள்ளை நிறங்களுக்கு  இடையில்  துலக்கமில்லாத மங்கலான நிறமும் இருக்கும்.  கணிதத்தில் இரண்டையும் இரண்டையும் யார் கூட்டினாலும் எங்கு இருந்து கூட்டினாலும்  நாலுதான் வரும். அரசியலில் அப்படியிருக்காது. இரண்டும் இரண்டும் ஐந்தாகவும் இருக்கலாம் அல்லது மூன்றாகவும் இருக்கலாம்.  காரணம் விட்டுக் கொடுப்புக்கள் தேவைப்படுகிறது. அரசியலில் அது எப்போதும்  இருக்கவே செய்யும். முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் 6 ஆம் திருத்தத் சட்டத்தின் கீழ் உறுதி மொழி எடுத்தார். அதாவது ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் எனச் சத்தியம் செய்தார். அதிலும் தமிழின பகைவன் என்று முத்திரை குத்தப்பட்ட  மகிந்தா இராசபக்சாவின் முன்னிலையில் விக்னேஸ்வரனது சம்பந்தி வாசுதேவா  இப்போது சுத்த தேசியவாதி என வேடம் போடும் விக்கினேஸ்வரன் ஏன் அப்போது ஒற்றையாட்சிக்கு விசுவாசகமாக இருக்க மாட்டேன் என்று சொல்லவில்லை? மாட்டேன் என்று சொல்லாதற்கு அரசியல் சாணக்கியம்தான் காரணம்.

மேலும், அரசியலில் எப்போதும் நடைமுறைக்கும் கோட்பாட்டுக்கும்  இடையில் இடவெளி இருக்கவே செய்யும். கடந்த காலத்தில்  வி.புலிகளே அரசோடு நடத்திய பேச்சு வார்த்தையின் போது தனித் தமிழீழத்தை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டுத்தான் பேச்சுவார்த்தை மேசைக்குப் போனார்கள். தமிழீழத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என நோர்வே நாட்டின் அனுசரணையாளர் எரிக் சொல்கெயிம் முதல் கூட்டத்திலேயே சொல்லியிருந்தார்.  வி.புலிகள் சாணக்கிய அரசியலைக் கடைப்பிடித்தார்கள். அதைக் குற்றம் என்று யாரும் சொல்ல முடியாது.   சொல்லவில்லை.  நல்லாட்சி அரசோடான ததேகூ இன் உறவு காரணமாகவே வட மாகாண சபையின் ஆளுநராக இருந்த சிங்கள இராணுவ தளபதி  ஜி.ஏ. சந்திரிசிறியை அங்கிருந்து மாற்ற முடிந்தது. அவரது இடத்தில் சிவிலியனைக் கொண்டுவர முடிந்தது. நல்லாட்சி அரசோடு ஒத்துழைத்ததால்தான் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த அரச மற்றும் தனியார் காணிகளில் 75 விழுக்காட்டை  விடுவிக்க முடிந்தது. வட கிழக்கு அபிவிருத்திக்கு ரூபா 12,500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முடிந்தது. மயிலிட்டி, காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்களை மேம்படுத்த முடிந்தது. பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த  முடிந்தது. விக்னேஸ்வரன் அபிவிருத்தி அல்ல எங்களுக்கு அரசியல் உரிமைதான் முக்கியம் என்கிறார். அதுவரை தமிழ்மக்கள் எக்கேடு கெட்டாலும் பருவாயில்லை என்கிறார்.  ஆனால் நாங்கள் சொல்கிறோம்  30 ஆண்டு போரினால் நொந்து நொடிந்து நூலாகிப் போன எமது மக்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்களது அடிப்படைத் தேவைகளான சொந்த வீடு, குடிதண்ணீர்,  மருத்துவம், தொழில் வாய்ப்பு செய்து கொடுக்கப் படவேண்டும். வேறு விதமாகச் சொன்னால் ததேகூ அரசியல் உரிமைக்கான போராட்டம் பொருளாதர அபிவிருத்தி இரண்டும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் எனச் சொல்கிறது.

        (4) உதாரணத்திற்கு 2015 பெப்ரவரி 4ஆம் திகதிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் என்னைக் கலந்து கொள்ளுமாறு சம்பந்தன் கேட்டுக் கொண்டார். 1958ஆம் ஆண்டு றோயல் கல் லூரியின் மாணவ படையினரின் அணிவகுப்பில் நான் கலந்து கொண்ட பின்னர் ஒரு வருடமா வது நான் சுதந்திர தின விழாக்க ளில் கலந்து கொள்ளவில்லை என்றும் நீதியரசராக இருந்தபோது கூட அழைக்கப்பட்டும் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறினேன். நான் செல்ல வில்லை. சம்பந்தன் சென்றார். அதற்கடுத்து அதே வருடம் பெப்ரவரி 10 ஆம் திகதியன்று இனப்படுகொலை பற்றிய தீர்மா னத்தை வடமாகாணசபை ஏகோ பித்து ஏற்றுக் கொண்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் என் மீது வைர்யம் கொண்டார்கள். பின்னர் வடக்கு மாகாணசபையில் என்னை வெளியேற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை நடை முறைப்படுத்தப்பட்டிருந்தால் நான் இன்று உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன். உங்களைப் போன்ற இளைஞர்கள் பலர் தெருவேறி ஆர்ப் பாட்டங்களில் இறங்கியதாலேயே எனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. அப்போது இளைஞர்களுக்கு இந்த முதியவர் ஒரு உறுதி மொழி அளித்தார். “உங்களுடன் இருப்பேன்’ என்று அன்று கூறி யிருந்தேன். ஆகவே தான் உங்களுடன் இருக்க இந்தக் கட்சி யைத் தொடங்கினேன். நான் ஒரு மாற்றுத்தலை
மையை உருவாக்க வேண்டும் என்று கட்சியைத் தொடங்க வில்லை. இது கால சூழலின் ஒரு கொடை என்றே கூற வேண்டும். அதாவது பல கட்சிகளும் தமது கட்சி நலன்களிலும் சுயநல எண்ணங்களிலும் மூழ்கி இருக்கும் போது மக்கள் நலம் பார்க்க ஒரு கட்சி தேவையாக இருந்தது. நாம் அந்த இடைவெளியை நிரப்பி உள்ளோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனை வரையும் அரவணைத்து ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை அடையப் பாடுபடுவதே எமது நோக்கம்.

பதில்: பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பது போல நீங்கள் தொடக்கியுள்ள கூட்டணியில் சிறிகாந்தா – சிவாஜிலிங்கம் கட்சி ஒரு கடிதத் தலைப்புக்  கட்சி. அதுபோலவே அக்கா அனந்தி தொடக்கியுள்ள கட்சியும் ஒரு காளான் கட்சிதான். விக்னேஸ்வரனது தமிழ் மக்கள் கூட்டணியிலும் ஆனை, சேனை, அணிதேர் புரவி எதுவும் இல்லை. தமிழ் மக்கள் பேரவையின் மறுவார்ப்புத்தான் விக்னேஸ்வரன்  தொடங்கியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி.  தமிழ் மக்கள் பேரவை இன்று நீற்றுப் போய்விட்டது. அதில் இருந்த  கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரஸ் கட்சி அதில் இல்லை. அது எப்போதோ வெளியேறிவிட்டது. இணைத் தலைவர் வசந்தராசா அதில் இல்லை.  இப்போது  அது ஒரு வெறும் குடம்தான். 

        (5) தமிழர்களின் இன்றிருக்கும் முக்கிய கட்சி அன்றைய அரச கட்சிக்குப் பின்னால் சலுகைகளுக்காக சரணாகதி அடைந்ததால் இன்று அக்கட்சியால் தமிழ் மக்களின் பல தேவைகளையும் அடையாளங் காட்டி அவற்றிற்காகப் போராட முடியாத நிலையில் தத்தளிக்கின்றது.

பதில்: இப்படிச் சொல்கிற நீங்கள் அரசுக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? ததேகூ சலுகைகளுக்கு சரணாகதி அடைந்தது என்று சொல்கிறீர்கள். அது சரியென்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன சலுகைகளுக்கு கையேந்தாத உத்தமரா? யோக்கியவானா? நீங்கள்  பெற்றுக் கொண்ட  சம்பளம்,  அரசாங்க வண்டிகள், பாதுகாப்பு, வாடகை இல்லாத வீடு,  கொழும்பு – யாழ்ப்பாணம் விமானப் பயணங்கள் போன்றவை சலுகைகள் இல்லையா? அ.டொலர் 65,000 பெறுமதியான வரியில்லாத வாகன இறக்குமதிக்கு  நீங்கள் குறிப்பிடும் அதே அரசாங்கத்திடம்  விண்ணப்பித்தீர்களா இல்லையா? அது சலுகை இல்லையா?

யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் என விக்னேஸ்வரன் தனது விமானப் பயணங்களுக்கு கடந்த நான்கு வருடங்களில் 22 லட்சம் ரூபா செலவிட்டிருக்கிறார் என்றும் அதே காலப் பகுதியில் அவர்  48 விமான பயணங்களை மேற்கொன்டிருக்கிறார் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு பயணித்த 48 தடவைகளும் தன்னுடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு அழைத்துச் சென்ற உதவியாளரது விமானப் பயணச் செலவும்  மாகாண சபையின் நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையின் வேறு எந்த மாகாண முதல்வரும் இந்த அளவு பயணங்களையோ செலவுகளையோ செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சலுகை இராணுவ ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடம் யாசித்துப் பெற்றதாகும். 

இவற்றின் அடிப்படையில் 2014 , 2015 ஆம் ஆண்டுகளில் ஓரு சேவைக்காக 35 ஆயிரம் ரூபாவீதம் பணம் செலுத்தப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு முதல்  2018 ஒக்தோபர் மாதம் வரை ஒரு சேவைக்காக 58 ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தப்பட்டிருக்கின்றது!

இந்த இலட்சணத்தில் நா.உறுப்பினர்கள் பணம், சலுகை இரண்டையும்  அரசிடம் கையேந்திப் பெற்றார்கள் என விக்னேஸ்வரன் குற்றம் சாட்டுகிறார்.  விக்னேஸ்வரனது வாதம் அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு வார் என்று பிளாவை நீட்டிய குடிகாரன் கதைமாதிரி இல்லையா?

        (6) போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ‘ஒரு நபர்’ கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந்நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளையோர்களை ஆயுதமேந்த வைத்தது என்பதை அவர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கர வாதம் என்று குறித்த நபர் கூறப்போய் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை அந்த நபர் கொச்சைப் படுத்திவிட்டார்.

பதில்: விக்னேஸ்வரன்  சுமந்திரனைத்தான் “அந்த நபர்” என்று கொச்சைத் தமிழில் விளித்து கொச்சைப்படுத்தி விட்டார்.  விக்னேஸ்வரன் நீதித்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்தில் 2001 – 2004 வரை நீதியரசராக இருந்தவர். போர்க்காலத்தில் அரச சேவையில் இருந்தவர், ஓய்வு பெற்ற பின்னர் பிரேமானந்தா என்ற காமுகனுக்குப்  பிறந்த நாள் விழா எடுத்தவர், புளியங்குளத்தில் பிரேமானந்தாவுக்குக் கோயில் கட்டியவர்,  இப்போது மற்றவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறார். ‘எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. அண்ணன் மாவை சேனாதி போன்றவர்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு தான் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்தார்.

சுமந்திரன் போராளிகளை எந்தக் கட்டத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்தது கிடையாது. அரசு கட்டவுழ்த்துவிட்ட அரச பயங்கரவாதமே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்கான  காரணம் என்றுதான் சுமந்திரன்  தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அண்மையில்  தமிழ்த் தேசிய அரசியலில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் என்ற பொருளில் நடந்த   கலந்துரையாடலில் பேசிய சுமந்திரன் “யுதப் போராட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை. தங்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகப் போராடவில்லை. தங்களது உயிர் போனாலும் பரவாயில்லை  எங்களுடைய மக்களுக்கு உயிர் வேண்டும் என்று போராடியவர்கள். அந்த நிலைப்பாட்டை எந்தக் காலத்திலும் நாங்கள் துச்சமாகக் கருத முடியாது. மக்களுக்காகத் தங்களது உயிரையே மாய்த்துக் கொள்வதற்காகப் போராட்டக்களத்திற்கு சென்றவனுடைய அந்த அர்ப்பணிப்பு எங்களாலே போற்றப்பட வேண்டிய ஒன்று. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை” எனத்  தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்காலத்தில் வி.புலிகளுக்கு தேநீர் கொடுத்த குற்றத்துக்காக, இடியப்பம் சாப்பிடக் கொடுத்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு பலர் சிறையில் அடைக்கப்பட்ட போது சுமந்திரன் அவர்கள்தான் அவர்கள் சார்பாக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்தார். அது அவர் நேரடி அரசியலுக்கு வராத காலம். ததேகூ இன் சட்ட ஆலோசகராக இருந்த காலம். ஆனால் விக்னேஸ்வரன் போர்க்காலத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் முன் நிறுத்தப்பட்ட வி. புலி சந்தேகநபர்களை எப்படி நடத்தினார்? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான  தண்டனை வழங்கினார்? அவர் கடுமையான தண்டனை வழங்கினார். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்தானே என்று  சிலர் நினைக்கலாம்.  சட்டம் தனது கடமையைச் செய்வதை யாரும் குறைகூற முடியாது என்றும்  வாதிடலாம். ஆனால் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ் – ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் – குற்றம் சாட்டப்பட்ட வி. புலிச்  சந்தேக நபர்களுக்கு சிங்கள நீதிபதிகள் கொடுத்த தண்டனையை விட இரட்டிப்புத் தண்டனையை விக்னேஸ்வரன் வழங்கினார்! அவர்தான் இப்போது புலி வேடம் போடுகிறார். போகட்டும் ஓய்வு பெற்றபின் அரசியலில் ஈடுபட்டாரா? ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் குரல் கொடுத்தாரா?

முதலமைச்சராக வந்த பின்னரும் ஆயுதக் குழுக்களோடு (ரெலோ, இபிஆர்எல்எவ், புளட்) தான் உறவு வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றார். அவர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப் போவதில்லை என்றார். ‘முன்னாள் போராளிக்குழுக்களோடு என்னால் இணைந்து இயங்க முடியாது‘என வெளிப்படையாகவே அறிக்கைவிட்டார். பின்னர் என்ன நடந்தது?

தே குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கினார். தமிழ் அரசுக் கட்சி அமைச்சர்களை வெளியேற்றினார்.  அமைச்சர் ப. சத்தியலிங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என விக்னேஸ்வரனே நியமித்த மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு தீர்ப்பளித்த பின்னரும் மருத்துவர் சத்தியலிங்கம் பதவி விலக வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார். அதே போல் அமைச்சர் டெனீஸ்வரன் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் படவில்லை என்று விசாரணைக் குழு தீர்ப்பளித்த பின்னரும் அவரைப் பதவி விலக வேண்டும் என்று விக்னேஸ்வரன் அடம் பிடித்தார். டெனீஸ்வரன் மறுக்கவே விக்னேஸ்வரன் அவரைப் பதவி நீக்கம் செய்து விட்டதாக கடித மூலம் அறிவித்தார். ஒரு அமைச்சரைப்  பதவி நீக்கம் செய்யும் உரிமை முதலமைச்சருக்கு இல்லை அந்த அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்ற சட்ட அறிவு விக்னேஸ்வரனுக்கு – ஒரு முன்னாள் நீதியரசருக்கு – இல்லாது இருந்தது வெட்கக் கேடு. இன்று என்ன நடக்கிறது? அதே  (பாதி) ரெலோ, இபிஆர்எல்எவ் கட்சிகளோடு விக்னேஸ்வரன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளார்! இபிஆர்எல்எவ் கட்சியோடு விக்னேஸ்வரன் கூட்டணி வைத்துக் கொண்டதை இரசிக்காத  தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார்  கோபித்துக் கொண்டு போய்விட்டார்!

மருத்துவர் சத்தியலிங்கம், சட்டத்தரணி டெனீஸ்வரன் இருவருக்கும் எதிராக “பெட்டீசம்” போட்டவர் அனந்தி ஆவர். ஆனால் அவர் ஓர் ஆண்டுக்கு மேல் நடந்த விசாரணைக் குழுவுக்கு முன்னர் தோன்றிச்  சாட்சியம் அளிக்க மறுத்துவிட்டார்.  தான் ஜெனீவாவுக்கு மனித உரிமைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போய்விட்டதால் தன்னால் விசாரணைக் குழுமுன் சாட்சியம் சொல்ல முடியவில்லை என்று ஒரு நொண்டிச் சாட்டைச் சொன்னார். தன்னை ஒரு “வீராங்கனை” என்று மற்றவர்களுக்குப் படம் காட்டும் அனந்தி ஏன் விசாரணைக் குழு முன் தோன்றி சாட்சியம் அளிக்கவில்லை? ஒரு கோழை போல் ஏன் பதுங்கிக் கொண்டார்? அப்படியான ஒரு நேர்மையற்ற அரசியல்வாதிக்குத்தான் விக்னேஸ்வரன்  அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்!

விக்னேஸ்வரன் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று பறைசாற்றிக் கொள்கிறார். அண்மையில் தன்னைப் போலவே தான் ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லும் நடிகர் இரஜினிகாந்த்  அவர்களைச் சென்னையில் சந்தித்தார். ஆனால்  உண்மையில் விக்னேஸ்வரன் ஒரு ஆன்மீகவாதியா? ஆன்மீகம் என்ற சொல்லுக்கு என்ன இலக்கணம்?

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி, சந்தணம், குங்குமம் பூசிக் கொண்டு திரிவதல்ல.   மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்குப்  பயந்து வாழ்வதுதான் ஆன்மீகம். ஒருவருக்கு  ஏற்படும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் அவரே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாகப் பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல் ஆன்மீகமாகும்.

தன்னை ஒரு கடவுள் அவதாரம் என்று சொல்லி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி,  வயது வராத சிறுமிகளைக்  கசக்கி முகர்ந்த  பிரேமானந்தாவுக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருவருக்கும் இடையில் தோற்றத்தில்  நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இருவர் நெற்றியிலும்  சந்தணம் – குங்குமப் பொட்டு, திருநீற்று பட்டை, முகத்தில்  தாடி, உதட்டில் கள்ளச் சிரிப்பு!

விக்னேஸ்வரனுக்கு ஒரு இருண்ட பக்கமும் இருக்கிறது.  ஒரு கொலை,  13  சிறுமிகள் பருவமடையு முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட பிரேமானந்தா என்ற காமுகனால்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இது  மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.  பிரேமானந்தா ஆச்சிரமத்தில் இருந்த அருள்சோதி அப்போது கர்ப்பமாக இருந்தார். நீதிமன்றத்தின் அனுமதியோடு அருள்சோதி கற்பத்தைக் கலைத்தார்.  மரபணுச் சோதனையில் கர்ப்பத்திற்குப் பிரேமானந்தாவே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆசிரமத்தில்  அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த இளம் பொறியாளர் இரவியின் உடலும்  தோண்டி எடுக்கப்பட்டது.

13 பெண்பிள்ளைகளை, அனாதைச் சிறுமிகளை,  பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கித் தனது காமப் பசியைத் தீர்த்துக் கொண்ட பிரேமானந்தாதான்  விக்னேஸ்வரனது குரு ஆவர். தனது பேச்சைத் தொடங்கு முன்னர் ‘குருப் பிரம குரு குருவின்  பிறந்த நாளைக் கொழும்பில் தடல்புடலாக விக்னேஸ்வரன் கொண்டாடி வருகிறார். புளியங்குளத்தில் பிரேமானந்தாவுக்கு கோயில் கட்டி அந்தக் காமுகனின் உருவச் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்து அதற்கு மூன்று காலப் பூசைக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கோயிலுக்குப் பெயர்  பூபால கிருஷ்ணர்  கோயில். வட மாகாண சபையின் முதலமைச்சராக வந்த பின்னரும்  திருச்சி பாத்திமா நகரில் இருந்த பிரேமானந்த ஆச்சிரமத்துக்குச் சென்று வழிபாடு செய்தார். 

விக்னேஸ்வரன் தனது பேச்சின் தொடக்கத்தில் ஒரு மந்திரம் சொல்வார். “’குருப் பிரம்மா – குரு விஸ்ணு – குரு தேவோ மஹேஸ்வரா – குரு சட்சாத் பரப் பிரம்மா – குருவே நமக’’  என்பதுதான் அந்த மந்திரம். அந்தக் குரு வேறு யாரும் அல்ல. பாலியல் சுவாமி சாட்சாத் பிரேமானந்தாவே அந்தக் குரு!

எல்லாவற்றுக்கும் மேலாக பிரேமானந்தா வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில்  அடைக்கப்பட்டிருந்த மூன்று சிறைக்கைதிகள் விடுதலை செய்யுமாறு வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் –

“இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன், கமலானந்தாவும் (தொடர் இரட்டை ஆயுள் தண்டனை) மற்றவர்களும் (பாலன் ஆயுள் தண்டனை, சதீஷ் ஆயுள் தண்டனை, நந்தகுமார் (ஆயுள் தண்டனை)  இந்த வழக்கில் பொய்யாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பிரேமானந்தாவின் ஆச்சிரமமும் அதன் சொத்துக்களும் பராமரிக்கப்பட வேண்டும். அவற்றைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. அவர்கள் நிரபராதிகள் என்பதால் தயவுசெய்து உடனடியாக அவர்களை விடுவிக்கவும்”.

“In his letter, Wigneswaran, a former judge of Sri Lanka’s Supreme Court, said Kamalananda and the others were falsely implicated in the case. Premananda’s ashram and its properties have to be maintained. No one is there to take care of them. Please immediately release them as they are innocent,” he said.

து தொடர்பாக கேள்வி எழுப்பிய முன்னாள் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா “இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது எம் மக்களின் துயர்துடைக்க இந்தியாவின் அனுசரணையை வேண்டி நிற்பதற்குப் பதிலாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்த சுவாமி ஆசிரமத்தை சேர்ந்த கொலையாளிகள் நான்கு பேரின் விடுதலை தொடர்பாகக் கோரிக்கை விடுத்தது எம் மக்களின் பிரச்சினைகளில் எமக்கு உண்மையில் எவ்வளவு அக்கறையிருக்கிறது என்பதனை தெளிவுபடுத்துகின்றது”  சி.தவராசா தெரிவித்திருந்தார். (https://www.bbc.com/tamil/sri-lanka-45956733)

படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் போலிச்சாமியார்களைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். அவர்கள் செய்யும் கண்கட்டிச் சித்து விளையாடல்களை நம்பி விடுகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் மட.டுமல்ல, இந்தியவில் மட்டுமல்ல உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போலிகள் என்று அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும் அவர்கள் இறந்த பின்னரும் அவர்களை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். இந்த வரிசையில் பிரேமானந்தா (பிரேம்குமார்) மட்டுமல்ல, நித்தியானந்தா, கல்கி பகவான் (விஜயகுமார்)  ராம்பால், மாதாராம், பீமானந்த் (முராத் திவேதி) ஆசாரம், சதாச்சாரி சாய் பாபா ஓம்ஜி, குர்மீத் ராம் ரஹீம் சிங் எனப் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் பாலியல் குற்றச்சாட்டில்தான் இவர்களை நீதிமன்றங்கள் உள்ளே தூக்கிப் போட்டிருக்கிறது.

நீதிமன்றத்தினால் ‘காமுகன்’ என்று வர்ணிக்கப்பட்டு, பதின்மூன்றுக்கும் அதிகமான சிறுமியரை பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கி, ஓர் உதவியாளரைப் படுகொலை செய்து அதே ஆச்சிரமத்தில் புதைத்த குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தவை தனது குருவாக விக்னேஸவரன் ஏற்றிப் போற்றி வழிபடுகிறார் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. பிரேமானந்தாவிற்கு திருச்சி பிரேமானந்தா ஆச்சிரமத்தில்  நடைபெறும் பௌர்ணமி வழிபாட்டில் விக்னேஸ்வரன்  ஆண்டுக்கு ஒருமுறையாவது கலந்து கொள்கின்றார்.

        (7) அது ஒரு புறமிருக்க எமது கட்சி பற்றிய ஒரு விளக்கத்தை அண்மையில் யாழ் ஊடகவியாளர் சந்திப்பின் போது வெளியிட்டிருந்தேன். அதாவது, எமது புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் வெளியிட்டுள்ளோம். அதில் எமது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப் போகின்றன என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இவை வெறும் வார்த்தை கள் அல்ல. கூட்டமைப்பு செயற் பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர் மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் முழுவதும் பரந்து வாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் செயற்பட வேண்டும். நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும். அவற்றை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாகவே நாம் முன்னெடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். தாமதம் ஆனாலும் இவற்றை நாம் செய்வதற்குத் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றோம்.

பதில்:  விக்னேஸ்வரன் 2013 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டவர். கடந்த ஆறரை ஆண்டுகளில் இன்னயின்ன திட்டங்களை நிறைவேற்றினேன், இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து இத்தனை கோடி டொலர்களைப் பெற்று அதனை வடக்கின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடுகள் செய்தேன் என்று விக்னேஸ்வரனால்  சொல்ல முடியுமா?  2017 இல் கனடாவில் விக்னேஸ்வரனது பெயரைச் சொல்லிக் கனடிய டொலர் 113,500 சேகரித்தார்கள். அதில் செலவு 63,350 டொலர் போக நிகர வருவாய் 50,150 டொலர் (ரூபா 6.8 மில்லியன்) எனக் கணக்குக் காட்டினார்கள். இதுபற்றி வட மாகாண சபைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் விக்னேஸ்வரனிடம்  உசாவியபோது ‘எனக்கு யாரும் காசும் தரவில்லை காசோலையும் தரவில்லை’ என்று பதிலிறுத்தார். அப்படியென்றால் விக்னேஸ்வரனது பெயரைப் பயன்படுத்தி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு எனச் சொல்லிச்  சேர்த்த ரூபா 6.8 மில்லியன் எங்கே? யாருடைய வங்கிக் கணக்கில்  அது பதுங்கிக் கிடக்கிறது?  விக்னேஸ்வரன் தனது பதவிக் காலத்தில் வினைத்திறனற்ற,  மடத்தனமான,  இயங்காத முதலமைச்சர் ( inefficient, inept and dysfunctional chief minister)  என்ற பட்டத்தை வாங்கியிருந்தார்.

        (8) அரசில் தங்கி இருக்காமல் எமது அபிவிருத்தியை எப்படி நாம் முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலும் அறிஞர்கள், புத்திஜீவிகளை ஒன்றிணைத்து எமது அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை எப்படி முன்னெடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆகவே, எமது அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காக தமிழ் தேசியக் கூட்ட மைப்பை போல அரசிடம் சரணாகதி அடைந்து மண்டி இடாமலும் தனி ஒருவரின் மூளையில் தங்கியிராமலும் நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இந்த அடிப்படையிலேயே இணைந்த வடக்கு – கிழக்கில் சுய நிர்ணய உரிமைகள் அடிப் படையிலான தீர்வை அடைவ தற்கான எமது அணுகுமுறை வேறுபடுகிறது. எமது வேணவாக்களை வென்றெடுப்பதற்கான இந்த அணுகுமுறையில் அடிப்படையாக நாம் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபடுகின்றோம். அதாவது, வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் தேசியம் மலரும் என்று நாம் நினைக்க வில்லை.

பதில்: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக  விக்னேஸ்வரன் வாயாலேதானே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்? இனிமேல் எதனை வெட்டிப் புடுங்கி வேரோடு சாய்க்கப் போகிறார்? இந்த வசனங்கள் எல்லாம் வெறும் வாய்ப்பந்தல்  ஆகும்.  வட மாகாண சபைக்கு  ஐந்தாண்டு கால (2013 – 2018) அபிவிருத்திக்கா  மத்திய அரசால் ஒதுக்கிய நிதி ரூபா 1725.6 கோடி ரூபா ஆகும். 2018 ஆம் ஆண்டுக்கு மட்டும் அபிவிருத்திக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2018ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்காக 130 கோடி ரூபாவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்காக 35 கோடி ரூபாவும், பாடசாலைக் கல்வியை ஓர் அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 7.9 கோடி ரூபாவும், சுகாதாரத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக 32.4 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

“தமிழ் தேசியக் கூட்ட மைப்பை போல அரசிடம் சரணாகதி அடைந்து மண்டி இடாமலும் தனி ஒருவரின் மூளையில் தங்கியிராமலும் நிறுவனமயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம்” என்பது வெறும் வாய்ப்பந்தல். கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் இது தொடர்பாக விக்னேஸ்வரன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. யூஎன்டிபி யாழ்ப்பாண விவசாய அபிவிருத்திக்கு  இனாமாகக் கொடுக்க முன்வந்த அ.டொலர் 150 மில்லியனை (ரூபா 2,250 கோடி) கோட்டை விட்டு விவசாயிகளது வயிற்றில் அடித்தார். 

ஒக்தோபர் 24, 2018 இல் தொடக்கப்பட்ட இவரது  தமிழ் மக்கள் கூட்டணி இதுவரை பதிவு செய்யப்படவில்லை. “ஆயுதக் குழுக்களோடு நான் உறவு வைத்திருக்க மாட்டேன்,  தமிழ் அரசுக் கட்சியோடுதான் உறவு வைத்திருப்பேன்” என்று சொன்னவர் இன்றைக்கு யாரோடு உறவு வைத்திருக்கிறார்? ரெலோ (சிவாஜி), இபிஆர்எல்எவ் ஆயுதம் ஏந்திய கட்சிகள்தானே!

(9) மற்றவர்கள் மீது சதா குற்றம் சொல்லி வருவதால் தமிழ்த் தேசியம் மலரும் என்று நாம் நினைக்கவில்லை. அல்லது அரசிடம் மண்டி இடுவதால் தீர்வு வரும் என்றும் நாம் நம்பவில்லை. அத்துடன் தனி ஒருவரின் புத்தியும் உழைப்பும் மட்டும் பலாபலன்களைக் கொண்டுவரும் என்றும் நாம் நம்பவில்லை.

பதில்:  படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்ற கணக்காக இப்படிச் சொல்லிக் கொண்டே பல கட்சிகளை உருவாக்கியதன் மூலம் தமிழ்மக்களிடையே விக்னேஸ்வரன் பிரிவினையை உருவாக்கியுள்ளார். விக்னேஸ்வரன தமிழ் அரசுக் கட்சியோடு ஒத்துழைக்கத் தயார், ஆனால் தலைமை (சம்பந்தர், சுமந்திரன்) மாற வேண்டும் என்கிறார். அதாவது அவர் தன்னை சம்பந்தர், சுமந்திரனை விட அறிவாளி அனுபவசாலி எனச் சொல்கிறார். இதைத்தான் சொல்வது அற்பர்களுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்று!

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தனி மனிதர்கள் தங்கள் முயற்சியால் தனி நாடுகளையே உருவாக்கியுள்ளார்கள்.  பாகிஸ்தானை உருவாக்கிய மொகமது ஜின்னா ஒரு தனி மனிதர்தான். இன்றைய நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மா சேதுங் என்ற தனி மனிதரே. இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர் உலக உத்தமர் காந்தி அவர்கள்.  காந்தியும் தனி மனிதரே!

சரி ஒரு கதைக்கு விக்னேஸ்வரனது வாதம் சரியென்று ஒத்துக்  கொள்ளுவோம். அதாவது தனி ஒருவரின் புத்தியும் உழைப்பும் மட்டும் பலாபலன்களைக் கொண்டுவரும் என நம்பவில்லை என்று விக்னேஸ்வரன் சொல்வதை சரி என்று எடுத்துக் கொள்வோம். பின் எப்படி  தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்  தேசிய மக்கள் முன்னணி என்ற 3 அமைப்புகளுக்கும்  விக்னேஸ்வரன் என்ற தனி ஒருவரே தலைவராக அல்லது செயலாளர் நாயகமாக இருக்கிறார்?  தகுதி வாய்ந்த வேறு யாரும் இல்லையா?

        (10) இந்த அடிப்படையில்தான் நாம் எம்மை ஒரு மாற்று அணியாகக் காண்கின்றோம். எமது தாரக மந்திரம் வித்தியாசமானது. அரசியலில் தன்னாட்சி, சமூக ரீதியாக தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே எமது குறிக்கோள். நீங்கள் எமது தனித்துவத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு எம்மை அடையாளம் கண்டு கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். எமது தேர்தல் விஞ்ஞாப னத்தை நாம் தாயரித்து வருகின்றோம். விரைவில் வெளியிடுவோம். நான் முதலமைச்சராக இருந்தபோது எமது மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு கூட்டமைப்பும் அரசும் ஒத்துழைக்கவில்லை. முட்டுக் கட்டைகளைப் போட்ட வண்ணமே இருந்தார்கள்.

பதில்:  ஆடத்தெரியாத  நர்த்தகி  கூடம் கோணல் என்றாளாம். கூட்டமைப்பும் அரசும் ஒத்துழைக்கவில்லை என்றால்  எப்படி 17 நியதிச் சட்டங்களை மாகாண சபையால் இயற்ற முடிந்தது?437 தீர்மானங்களை நிறைவேற்ற முடிந்தது?  யதார்த்தம் என்னவென்றால் விக்னேஸ்வரன் தனது கையாலாகத்தனத்துக்கு கூட்டமைப்பையும் அரசையும் நோகிறார். உண்மை என்னவென்றால் விக்னேஸ்வரன் பதவி ஏற்ற நாள் முதல் பிரதமர் இரணிலோடு மல்லுக்கு நின்றார். “உன்னைத் தெரியாதா? நீ 40 எம்பிகளோடு பிரதமராக வந்த நீ? உனது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று எனக்குத் தெரியாதா?” என்றார்.  இப்படி ஒரு நாட்டின் பிரதமரோடு வாய் காட்டினால் அவர் இவரோடு ஒத்துழைப்பாரா? அல்லது முட்டுக்கட்டை போடுவாரோ?

பிரதமர் இரணிலோடு மட்டுமல்ல, சனாதிபதி சிறிசேனாவோடும் கொழுவல்.  ஆளுநர்களோடு சண்டை.  வட மாகாண சபை முதன்மைச் செயலாளரோடு தகராறு. சக அமைச்சர்களோடு சண்டை, யூஎன்டிபி வதிவிடப் பிரதிநிதி யோடு தனது மருமகனுக்கு வேலை கொடுக்கவில்லை என்று சண்டை. இப்படி மற்றவர்களோடு எதற்கெடுத்தாலும் சண்டை பிடித்தால் ஒத்துழைப்பு எங்கிருந்து வரும்?  இப்படி அவர் சண்டை பிடித்ததற்கு அவரது தன்முனைப்புத்தான் காரணம். “நான்” என்ற தலைக்கனம்தான் காரணம். ஒரு ஆணையாளர் விக்னேஸ்வரனது ஆய்க்கினை தாங்காமல் தனது பதவியைத் துறந்து தென்னிலங்கைக்குப் போய்விட்டா!

        (11) நான் தற்போது ஒரு நம்பிக்கை பொறுப்பை உருவாக்கி உள்ளேன். இதனூடாக பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளேன். அதே போல கூடிய விரைவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப் புத்திஜீவிகள் அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு சிந்தனை மையத்தை உருவாக்குவேன். நாம் மக்கள் நலம் சார்ந்த நட வடிக்கைகளிலேயே இறங்கியுள்ளோம். அதன் அடிப்படையில்த் தான் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை எமது இளைஞர்கள் ஒழுங்கமைத்துள்ளார்கள். அடுத்து மக்கள் கருத்துப் பகிர்வுக்குப் போகலாம் என்று நினைக் கின்றேன்.

பதில்: இதனைப் படிக்கும் போது  மணலை கயிறாக்கி வானத்தை வில்லாக வளைப்பேன் என்று புளுகினவன் கதையாக இருக்கிறது.  விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த போது முதலமைச்சர் மாநாட்டுக்கு ஒழுங்காகப் போனதில்லை. மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாதான் போனார். எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் விக்னேஸ்வரன் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நிற்பதில்லை. தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கிய பின்னர் விக்னேஸ்வரன் எத்தனை முறை ஆனையிறவைத் தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு போயிருக்கிறார் என்று சொல்லட்டும் பார்க்கலாம்? மக்கள் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விக்னேஸ்வரனுக்கு தனது உயரம் தெரியாமல் இருக்கலாம். தமிழ்மக்களுக்கு அது தெரியும்.

இப்படியான சாமுத்திரிகா இலட்சணம் படைத்த  ஒருவர், கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத விக்னேஸ்வரன் இனிமேல் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போகிறாராம்!  கேள்வரகில் வெண்ணெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதியில்லை என விக்னேஸ்வரன் நினைக்கிறார்! (முற்றும்)

Share the Post

You May Also Like