யார் இந்தக் கஜேந்திரகுமார்?

இலங்கைத் தமிழ் மக்களின் நன்மை கருதி 1901 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டுவரை இருந்த கட்சியாகிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன். 1949 ஆம் ஆண்டு – இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் நிறுவப்பட்ட முதலாவது அரசில் இவரது பேரன் ஜி.ஜி. பொன்னம்பலம் மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதன்போது அதனைக் கடுமையாக எதிர்த்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் போன்ற தலைவர்கள் பிரிந்து சமஷ்டிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். அது பின்னர்இலங்கைத் தமிழரசுக் கட்சியாக மாற்றம்பெற்றது.

Posted by தெல்லியூர் சி.ஹரிகரன் on Wednesday, March 18, 2020

இன்று கஜேந்திரகுமார் சமஷ்டி மீது காதல் மோகம் கொண்டவர்போல நடிக்கின்றார். சமஷ்டிக்குச் சொந்தக்காரரே தமிழரசுக்காரர்களாகிய நாங்கள்தாம். அவரதுபேரன் சமஷ்டியைக் கடுமையாக எதிர்த்த ஒருவர்.

அவரது தந்தை குமார் பொன்னம்பலமும் ஒரு வழக்கறிஞர்தான். 1966 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸின் இளைஞர் அணி செயலாளராக இருந்த இவர், 1977 ஜி.ஜி. மறைந்தபின்னர் கட்சியின் தலைவரானார். 1970 ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகத்தின் கடும் முயற்சியால் தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தந்தையும் ஜி.ஜியும் மறைந்துவிட்டார்கள். 2010 ஆம் ஆண்டு கூட்டமைப்பில் காங்கிரஸ் சார்பில் விநாயகமூர்த்திக்கும், கஜேந்திரகுமாருக்கும் இரு ஆசனங்கள் வழங்கப்பட தனது அல்லக்கைகள் குதிரைக் கஜனுக்கும் பத்மினிக்கும் சீற்றுக்கேட்டு அடிபட்டு எப்படி கஜேந்திரகுமார் வெளியேறினாரோ அதேபோன்றுதான் அவரது தந்தை குமார் பொன்னம்பலமும் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சந்தர்ப்பம் கட்சியால் வழங்கப்பட, இல்லை யாழ்ப்பாணம் தொகுதி தரவேண்டும் என்று சண்டைபிடித்து மல்லுக்கட்டி மீண்டும் தமிழ்க்காங்கிரஸை உருவாக்கினார். ஆனால், பாவம் அவருக்கு எம்.பியாகும் சந்தர்ப்பம் ஒருபோதும் கிடைக்கவில்லை. தமிழ்மக்கள் அவரைக் கடாசி எறிந்தார்கள்.

தந்தையை விஞ்சிய தனையனல்லவா கஜேந்திரகுமார். கூட்டமைப்பில் இருந்தபோது எம்.பியாகின்ற சந்தர்ப்பம் கிடைத்தும், ”நுதலையும் தன்வாயால் கெடும்” என்ற மாதிரி தன்வாயால் கெட்டு, கூட்டமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அவரை மக்கள் கடாசி எறியத் தவறவில்லை. ஒரு பிரதேசசபை உறுப்பினராகக்கூட அவரை மக்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய பின் அங்கீகரிக்கவில்லை.

கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய வாதியா?

ஒருபோதும் இல்லை. பேரன், அப்பன் சொத்தில், சொத்துசுகத்தோடு வெளிநாட்டில் வாழ்ந்த கஜேந்திரகுமாருக்கு தேசிய இன உணர்வு எள்ளளவும் இல்லை. ஆனால், தான் ஓர் இன உணர்வாளன் என்று நடிப்பதில் மகா நடிகன் அவர்.

விடுதலைப் புலிகளின் வீரம் நிறைந்த தியாகங்கள் எதிரிகூட போற்றும் அளவுக்கு உயர்ந்தவை. விடுதலைப் புலிகள், இனத்தின் மீது தீவிர காதல் கொண்டு தம் கழுத்தில் நஞ்சைக் கட்டித் தொங்கவிட்டு எந்த நேரமும் சாவினை நெஞ்சினில் தாங்கிக்கொண்டும் உடலிலே வெடிகுண்டைக்கட்டிக்கொண்டும் எமது இனம் இந்த மண்ணில் அடிமைகளின்றி நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகத் தாயகக் கனவோடு ”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று உச்சாடனம் செய்தபடியே மரணித்தவர்கள்.

அந்த புனிதர்களை, வெளிநாட்டில் ராஜயோக வாழ்வுவாழ்ந்த கஜேந்திரகுமார், ”பெற்றோர் பிள்ளைகளை வளர்ப்பதற்கு வறுமையால் – கஷ்டத்தால் – போராட்டத்துக்கு அனுப்பினார்கள்” என்று நாகூசாமல் கூறுகின்றார்.

அவர்மீது தப்பில்லை. ஏனெனில், அவர் ஒரு துப்பாக்கி வேட்டுச் சத்தம் அறியாதவர். இராணுவக் காவலரண்களுக்கு அருகில் சென்று உயிரைக் கையில் பிடித்தவண்ணம் சினைப்பர் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது எம்மைப்போன்று பங்கர் வெட்டி அறியாதவர். பாடசாலைக்குச் செல்லும்போதும் வீதியால் செல்லும்போதும் துரத்தித் துரத்தி ஹெலிக்கொப்டர் மூலம் துப்பாக்கி வேட்டுக்கள் வரும்போது மரத்தைச் சுற்றிச் சுற்றி உயிரைக் காப்பாற்றிய அனுபவம் அற்றவர். பொம்மர், சுப்பர் சொனிக், அவ்ரோ போன்ற விமானக் குண்டுவீச்சுகளுக்கு தாய்மண்ணிலே வீழ்ந்து தவண்டு, புரண்டு மண்ணை முத்தமிட்டு அறியாதவர். குடாநாட்டை இராணுவம் கைப்பற்றிய பின்னர் இராணுவத்தின் மூச்சுக்காற்றுக்கூட பட்டறியாதவர். அவர் அப்படித்தானே பேசுவார்.

அவர் கொச்சைப்படுத்தியது விடுதலைப் புலிப் போராளிகளை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும். எமது இனத்துக்காகவே அவர்கள் ஆயுதம் தூக்கினார்கள். அவர்களின் போராட்டத்துக்கு பெரும் பங்காற்றியவர்கள் பல்கலைக் கழகமும், யாழ்.இந்துக் கல்லூரியும். இரண்டும் எமது தாயகப் பிரதேசத்தின் உயர் கல்வி நிறுவகங்கள். போராட்டத்தில் கூடுதலான போராளிகளை இணைந்த பெருமை இந்த இரு கல்வி நிறுவகங்களுக்கும்தான் உண்டு. கற்றறிவுடையவர்கள்தான் போராட்டத்துக்குப் பெரும் பங்கு, பணி ஆற்றியிருக்கின்றார்கள். கஜேந்திரகுமார் சொன்னமை போன்று வறுமையில் எவரும் போராட்டத்துக்குச் செல்லவில்லை. சமூகத்தில் உயர் தொழிலில் இருந்த எத்தனையோ கல்விமான்களின் பிள்ளைகள் விடுதலைப் போரில் உயர் பதவிகளை வகித்துள்ளார்கள். உதாரணத்துக்கு தியாகி லெப்ரினன் கேணல் திலீபனை எடுத்துநோக்கின் அவரது தந்தை ஓர் ஆசிரியர். யாழ்.இந்துவின் புதல்வனான இவர், பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன். தேசியத்தின் மீதும், இனத்தின் மீதும் கொண்ட உண்மைப் பற்றினால் அவர் எமக்காக 12 நாள்கள் உணவையும் நீராகாரத்தையும் ஒறுத்து தியாக தீபமாகினார்.

கஜேந்திரகுமார் போன்ற போலிகளால் இவ்வாறான வீரத்தையும் தியாகத்தையும் நினைந்துகூடப் பார்க்க முடியுமா? நரம்பில்லா நாக்கால் ஏழனம் செய்யத்தான் முடியும்.

எம்மினிய மக்களே! எமக்காகப் போராடி இந்த மண்ணில் விதையாகியவர்களை யாரும் போற்றத் தேவையில்லை. புகழத்தேவையில்லை. நீங்கள் போற்றுவதாலும் புகழ்வதாலும் இனி அவர்களின் தாயகக் கனவு நிறைவேறப்போவதில்லை. ஆனால், வெளியே அவர்களைப் புகழ்வது போல் புகழ்ந்து, போலித் தேசியம், போலி இன உணர்வு பேசிக்கொண்டு, அகத்தே அவர்களை வைகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மக்கள் தெளிவானவர்கள். கஜேந்திரகுமாரின் அல்லக்கை ஒன்று கூறுகின்றது ”அந்த இறைவனுக்குப் பிறகு அண்ணன் பிரபாகரனுக்குப் பிறகு இந்த மண் தனது தலைவராகக் கஜேந்திரகுமாரைப் பெற்றிருக்கின்றது” என்று. இதை அந்த அல்லக்கை சொல்லும்போது எமது மக்கள் கல்லால் எறிந்து அதைத் துரத்தியிருக்கவேண்டும். யாரோடு யாரை ஒப்பிடுவது?

ஆகவே, இந்தத் தேர்தலில் மீண்டும் போலித் தேசியவாதிகள் கஜேந்திரகுமார் கம்பெனியை மக்கள் தூக்கிக் கடாசி எறிவார்கள் என்பது வெள்ளிடைமலை.

தெல்லியூர் சி.ஹரிகரன்

Share the Post

You May Also Like