விடுதலை வேட்கையோடு உருவான வீட்டை உடைப்பது வரலாற்றுப்பிழை- செல்வம்

விடுதலை வேட்கையோடு  உருவாக்கிய வீட்டை தமிழ்மக்கள் உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாககூடாதென முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசிய கூட்டமைப்பை மௌனிக்க செய்வதற்காகவே வன்னியில
அதிகம் பேர் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் கூட்டமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேசத்திற்கு காட்டுவதற்கான சூழ்ச்சியைதான் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும்  மேற்கொள்கின்றனர்.

இன்று அனைவரும் கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர். எனினும் தமிழர் பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து அடக்குமுறைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தை யாரும் விமர்சிக்க முன்வரவில்லை. அதனை கூட்டமைப்பு மாத்திரமே எதிர்த்து வருகின்றது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் எமது தேசியத்தை நசுக்க நினைக்கின்ற ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் சரியான பாடத்தை நாம் புகட்டவேண்டும்.

அற்ப சொற்ப சலுகைகளிற்காக எமது உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்கமுடியாது.

விடுதலை என்ற வேட்கையோடு வீட்டை உருவாக்கியவர்கள் எமது மக்கள். அவர்களே அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு வரமுடியாது.

எனவே உங்கள் வாக்கினை எமது பூர்வீகம் சிதைக்கப்படுவதற்கு பாவிக்கப்போகின்றோமா அல்லது எமது மண்ணை அபகரிப்பதற்கு பாவிக்கப்போகின்றோமா என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like