இன்று தலைவர் பிரபாகரன் சுதுமலையில் மக்கள் முன் உரையாற்றிய நாள். அதில் அவர் தான் அரசியல்வாதி இல்லை, ஒரு புரட்சியாளன் என்று தெளிவாக பிரகடனப்படுத்துகிறார். புரட்சியாளர் பிரபாகரனின் பாதையை கைவிட்டு, இன்று எல்லோரும் தேர்தல் அரசியல் பாதைக்குள் வந்து விட்டோம்.
இதிலே சிலர் தம்மை தலைவர் பிரபாகரன் பாதையில் நடைபோடுவதாக கற்பனை செய்வதும், அந்தக் கற்பனையை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதும், அதை நம்பாதவர்களை ‘துரோகி’ என்பதும் மிகப் பெரிய அயோக்கியத்தனமான செயலாகும்.
தலைவர் பிரபாகரனின் பாதையில் செல்லவும் முடியாது, அவருடைய அரசியல் இலக்கை நோக்கி பயணிக்கவும் முடியாது என்று வெகு சிலரே இன்றைக்கு நேர்மையாக ஒத்துக் கொள்கிறார்கள். அப்படி ஒத்துக் கொள்பவர்களையும் பார்த்து துரோகிகள் என்று இந்த ஏமாற்றுக்காரர்கள் கூக்குரலிடுகிறார்கள்.
எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையான இவர்கள் தமது அராஜகத்தை எல்லோர் மீதும் திணிக்கிறார்கள்.
இரண்டு தேசங்கள், சமஸ்டி, மாநிலத்தில் சுயாட்சி, அரசியலமைப்பு மாற்றம் என்று பல்வேறு பெயர்களில் சொல்லிக் கொண்டாலும், எல்லோரும் ஒருமித்த இலங்கை நாட்டுக்குள் வாழ்வதற்கு சம்மதித்து விட்டோம் என்பதுதான் இவற்றின் பொருள்! இதிலே சமஸ்டி கேட்பவனை துரோகி என்பதும், தேசம் கேட்பவனை தியாகி என்பதும் அறிவற்ற செயலாகும்.
இப்படியானவர்கள் பெறுகின்ற சிறிய வெற்றி கூட தமிழர்களை மேலும் பின்னோக்கி தள்ளி விடும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.
—————————— —————————— —————————— —————————— –
2010 ஆம் ஆண்டு ததேகூ இல் இருந்து தமிழ்க் காங்கிரசின் நிரந்தரத் தலைவர் கஜேந்திரகுமார் வெளியேறியதற்கான காரண, காரியங்கள் பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கின்றனர். இருக்கைப் பங்கீட்டில் எழுந்த கரத்து முரண்பாடு காரணமாகவே தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது எனப் பலரால் சொல்லப்படுகிறது. ஆனால் இதில் உண்மையில்லை. தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த இடங்களில் கஜேந்திரகுமார் மற்றும் அக்கட்சியின் தலைவர் வினாயகமூர்த்தி போட்டியிட இருந்தார்கள். ஆனால் கஜேந்திரகுமார் தனக்கு மேலதிகமாக ஒரு இடம் வேண்டும் என்று கேட்டார். இது கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வேட்பாளர் யாழ்ப்பாண கரையோர மக்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அது பற்றி மீண்டும் பேச ஒப்புக்கொண்டு சென்ற கஜேந்திரகுமார் பின்னர் வரவே இல்லை.
இருக்கை ஒதுக்கீட்டில் மொத்தம் 12 இடங்களில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் (25 விழுக்காடு) ஒதுக்கப்பட்டது. அன்றைய ததேகூ இல் மொத்தம் 4 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இருக்கைகளை ஒதுக்குவதில் ததேகூ நியாயமாகவே நடந்து கொண்டது. எனவே கஜேந்திரகுமார் வெளியேறியதற்கு இருக்கை ஒதுக்கீடு காரணம் அல்ல.
தமிழ்க் காங்கிரசில் இருந்த செல்வராசா கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் தங்களுக்கும் இருக்கை தரவேண்டும் என்று கடுமையாகப் பிரயத்தனப்பட்டார்கள். கனடாவில் உள்ள வி.புலிகள் சார்பு இயக்கப் பிரதிநிதிகள் ஊடாக இந்தப் பிரயத்தனம் செய்யப்பட்டது. இது விடயமாக நான் சம்பந்தன் ஐயாவோடு பேச வேண்டும் எனக் கேட்டார்கள். முதலில் நான் மறுத்துவிட்டேன். வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் விடயத்தில் நாங்கள் (கனடா ததேகூ) தலையிடுவதில்லை என்பது எமது கோட்பாடு என்பதை விளக்கினேன். ஆனால் என்னைச் சந்தித்தவர்கள் பிடிவாதம் பிடித்தனர். எனவே சம்பந்தர் ஐயாவுடன் தொலைபேசியில் பேசினேன்.
கஜேந்திரன், பத்மினி இருவருக்கும் இருக்கைகள் ஒதுக்குமாறு கேட்கிறார்கள் அதனை பரிசீலிக்க முடியுமா என்று கேட்டேன். “கஜேந்திரனுடன் சேர்ந்து நாங்கள் வேலை செய்ய முடியாது. பத்மினியைப் பொறுத்தளவில் இங்குள்ள (யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்) பெண்கள் அமைப்புக்கள் விரும்பவில்லை” என்றார். இதுதான் நடந்தது.
கஜேந்திரகுமார் கட்சியினர் ததேகூ இல் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதற்குச் சொல்லும் காரணம் ததேகூ இன் கொள்கை, கோட்பாட்டில் தீவிரம் இல்லை அதனால் வெளியேறினோம் என்கிறார்கள்.
2010 இல் ததேகூ இன் கோரிக்கைகள் பற்றி ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதனை வாசித்த கஜேந்திரகுமார் “இவற்றை அரசாங்கம் தருவதாக இருந்தால் அது பெரிய காரியம்” என்று சொன்னார். எனவே வெளியேற்றத்துக்கு இப்போது கஜேந்திரகுமார் சொல்லும் காரணம் உண்மையில்லை.
வெளிநாட்டில் உள்ள வி.புலிகள் ஆதரவு அமைப்புக்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சி த.தே.கூ இல் இருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டார்கள். அதற்கமையவே மார்ச் 2010 இல் மிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரசவமானது.
வரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தப் பதிவை பதிவு செய்கிறேன்.