ராபக்சக்களின் காட்டாட்சிக்கு ஒருபோதுமே அனுமதியோம் – முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டி எதிர்ப்போம் என்கிறார் சுமந்திரன் எம்.பி.

“அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தை அடியொற்றியதாகவே 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைந்துள்ளது. மீண்டும் காட்டாட்சிக்கு இது வழிவகுத்துள்ளது. இதற்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டி நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இந்தச் சட்டமூலத்தை முழுமையாக எதிர்ப்போம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது. அதை நான் உன்னிப்பாகப் பார்த்தேன். அதிலுள்ள பெரும்பாலான விடயங்கள் கடந்த காலத்தில் ராபக்சக்களின் காட்டாட்சிக்கு வழிவகுத்த 18ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள விடயங்களே உள்ளன. அதாவது 18ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு முடிவுகட்டும் வகையிலேயே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ராஜபக்ச அரசு தயாரித்துள்ளது. இதனூடாக ஜனாதிபதியின் கை மேலோங்கியுள்ளது. குடும்ப ஆட்சி வலுப்பெற்றுள்ளது. எனவே, மீண்டும் சர்வாதிகார ஆட்சி – காட்டாட்சி ஆட்சி தலைவிரித்தாடவுள்ளது.

இலங்கை ஜனநாயக நாடு என்றால் இங்கு சர்வாதிகார ஆட்சிக்கோ – காட்டாட்சிக்கோ அல்லது குடும்ப ஆட்சிக்கோ ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது.

எனவே, முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டி நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாம் முழுமையாக எதிர்ப்போம்” – என்றார்.

Share the Post

You May Also Like