கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளில் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஏகோபித்த ஆதரவு அனைத்து உறுப்பினர்களும் வழங்க வேண்டும் என்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் எனக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூடித் தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சி சபைகளின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இன்று யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்போதே மேற்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உள்ளூராட்சி  சபைகளின் உறுப்பினர்களுக்கும் அறிவிப்பதாகவும் இதன்போது முடிவு எட்டப்பட்டது என  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

மேற்படி தீர்மானத்தைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் ஒப்பமிட்ட கடிதமாக அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் உடனடியாகவே கடிதம் தயாரிக்கப்பட்டு ஒப்பத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Share the Post

You May Also Like