கொழும்பில் மாத்திரம் 11 ஆயிரத்துக்கும்

மேற்பட்டோருக்கு தொற்று- 101 மரணங்கள்!

 

மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவிப்பு

 

கொழும்பு மாநகரசபை எல்லைப் பகுதிகளில் மாத்திரம் கடந்த வியாழக்கிழமை வரை 11ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை 101 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் 58 ஆயிரத்து 35 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், கடந்த வியாழக்கிழமை மாத்திரம் 950 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையுடன் 150 ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றன.

அத்துடன், ஆரம்பத்தை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் சில பிரதேசங்களில் இன்னும் கொரோனா பரவல் தொடர்ந்து இருந்துவருவதாக ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதன் மூலமும் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதன் மூலமும் இந்த நிலையைக் கட்டுப்படுத்தலாம என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

திருகோணமலை மாவட்டத்தில்
மேலும் 9 பேருககுக் கொரோனா!

 

திருகோணமலையில் மேலும் ஒன்பது புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, திருகோணமலையின் தொற்றாளர்களது எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை மூதூரில் இருவரும் திருகோணமலையில் ஏழு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை நகரில் இதுவரை 64 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மூதூரில் 27 பேரும் கிண்ணியாவில் எட்டுப் பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், தம்பலகாமன் பகுதியில் ஆறு பேரும், கோமரங்கடவல மற்றும் குச்சவெளியில் தலா ஒவ்வொருவரும் சேருவில மற்றும் உப்புவெளியில் தலா மூவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

 

 

மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள்
கொரோனாப் பரவலை அடுத்து அதிகரிப்பு!

யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டு

 

இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

வழமையான வன்முறைச் சம்பவங்களை விட 40 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு மார்ச் முதல் ஒக்ஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கையில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கை மாத்திரமின்றி உலகம் முழுவதும் தொலைதூரக் கல்வி முறையினால் விளக்கமளித்தல் மற்றும் கலந்துரையாடும் சந்தர்ப்பம் இல்லாமையும் சில மாணவர்களுக்கு இணையத்தள வசதி இல்லாமையும் வன்முறைகள் அதிகரிப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை போசாக்கு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

மட்டக்குளி பெண்ணின் ஜனாஸா அடக்கம்
வர்த்தமானி அறிவித்தல் மீறப்பட்டுள்ளதா?

கொழும்பு 15 மட்டக்குளியை சேர்ந்த பெண் ஒருவர், கொரோனா தொற்றினால் மரணித்தார் எனவும், அவரது ஜனாஸாவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் உத்தரவுக்கு அமைய  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, வர்த்தமானிக்கு புறம்பாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

 

கேகாலையில்  செய்தியாளர் சந்திப்பை நடத்தி, சிங்ஹலே நாம் அமைப்பின் தலைவர் ஜம்புரேவல சந்தரதன தேரர் இது தொடர்பில் கொழும்பு பிரதான  சட்ட வைத்திய அதிகாரி மீது குற்றம் சுமத்தினார்.

இந் நிலையில் மட்டக்குளி பெண்ணின் மரணம் தொடர்பிலும் அவரது  ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பிலும் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி  விஷேட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தன் மீதான குற்றாச்சாட்டுக்களை முற்றாக மறுத்தார்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்த எந்த ஒருவரின் சடலத்தையும் அடக்கம் செய்வதற்காக, வர்த்தமானிக்கு அப்பால் சென்று தான் அனுமதியளிக்கவில்லை என அவர் கூறினார்.

கடந்த 12 ஆம் திகதி மாலை, கொழும்பு 15 மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 69  வயதான பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் அவரது சடலம்  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் அப்பெண் மரணித்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் மீது, கடந்த 14 ஆம் திகதி பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைக்கு முன்னர்,  13 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்  அச்சடலத்துக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டதாக அப்பெண் தொடர்பில் வெளியிடப்பட்ட  பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், அந்தப் பெண் 17 வருடங்களாக நீரிழிவு நோயினால் அவதியுற்று வந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அப்பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முன்னெடுத்த பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில், அங்கிருந்து அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அங்கு கடந்த டிசெம்பர் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில், அவரது உடலில் வைரஸுக்கு எதிரான தாக்கங்கள் உள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் மீள கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்ப்ட்டுள்ளார்.

இந் நிலையில் அவர் டிசெம்பர் 11 ஆம் திகதி  தேசிய வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளமையுடன், மறு நாள் அதாவது கடந்த 12 ஆம் திகதி  வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் தொடர்பில் மரணத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலும் கொவிட் 19 தொற்று அவரது சடலத்தில் உள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

இந் நிலையில் இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி,  வைத்திய  பரிசோதனை நிலையம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய வைரஸ் தொடர்பிலான விஷேட நிபுணர்கள் மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த சடலம் நோய் காவியாக இருக்காது என முடிவெடுக்கப்பட்ட நிலையில், குறித்த மரணம் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மரணம் அல்ல என பிரேத பரிசோதனைகளில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படியே சந்தேகத்துக்கு இடமான எந்த காரணிகளும் இல்லை என்பதால், சடலம்  இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கலாம் என பிரேத பரிசோதனை அரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஒத்த சம்பவமொன்று கடந்த 13 ஆம் திகதி அஹுங்கல்லை பகுதியிலும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

Warning: mysqli_query(): (HY000/1194): Table 'wp_posts' is marked as crashed and should be repaired in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1924